பெட்டி கடையாக இருந்தாலும் பிரச்சினை இல்லை.. கிரெடிட் கார்டு மூலமாகவே பணம் செலுத்தலாம்! எப்படி?
தமிழ் நாட்டில்: இந்தக் காலகட்டத்தில் நாம் பெரும்பாலும் யுபிஐ மூலமாகவே பணம் அனுப்பியும் பெற்றும் வருகிறோம். ஆனால், நம்மில் பலருக்கும் கிரெடிட் கார்டுகளை யுபிஐ செயலியில் இணைக்கலாம் என்பது தெரியாது. கிரெடிட் கார்டுகளை எப்படி யுபிஐ செயலியில் இணைக்கலாம்.. எந்த கிரெடிட் கார்டுகளை எல்லாம் இணைக்கலாம்.. இதற்கான ரூல்ஸ் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் எல்லாமே தொழில்நுட்ப வசமாகி வருகிறது. குறிப்பாகக் கடைகளுக்கு நாம் செல்லும் போது யுபிஐ முறையிலேயே பணம் செலுத்தப் பலரும் விரும்புகிறார்கள்.
யுபிஐ + கிரெடிட் கார்டு:
சில்லறை பிரச்சினை இல்லை.. திருட்டு பயம் இல்லை உள்ளிட்ட காரணங்களால் பலரும் யுபிஐ மூலமாகவே பணம் செலுத்த விரும்புகிறார்கள். இதுபோல யுபிஐ உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்த நமக்கு வங்கிக்கணக்கு கட்டாயம் தேவை. வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைத் தான் நாம் யுபிஐ மூலம் செலவிட்டு வருகிறோம். ஆனால், யுபிஐ செயலிகளில் கிரெடிட் கார்டுகளை இணைத்தும் கூட பயன்படுத்த முடியும். இதுபோல இணைத்துப் பயன்படுத்தும் போது பணம் வங்கிக்கணக்கில் இருந்து டெபிட் ஆகாது. மாறாக கிரெடிட் கார்டு லிமிட்டில் இருந்தே குறையும்.
சிறு கடைகளில் யுபிஐ மட்டுமே வாங்குவார்கள்.. கிரெடிட் கார்டு வாங்க மாட்டார்கள். அதுபோன்ற நேரங்களில் வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்றால் இது நமக்கு கை கொடுக்கும். யுபிஐ செயலியில் கிரெடிட் கார்டை எப்படி இணைப்பது.. யாரெல்லாம் இதுபோல இணைக்க முடியும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
முதலில் உங்கள் செல்போனில் இருக்கும் யுபிஐ செயலியில் ஓபன் செய்து கொள்ளுங்கள். பிறகு அதில் பேமெண்ட் முறையில் add payment method என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிரெடிட் கார்டு என்பதை கிளிக் செய்து, உங்கள் கார்டு நம்பர், சிவிவி எண், கார்டு காலாவதி தேதி ஆகியவற்றை பதிவிட்டு, ஓகே கொடுங்கள். அடுத்து உங்கள் செல்போனுக்கு ஓடிபி வரும். அதை அங்குப் பதிவிடுங்கள்.
அவ்வளவு தான் அடுத்த ஸ்டெப்பில் கிரெடிட் கார்டு உடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடி உருவாகிவிடும். வங்கிக்கணக்குடன் இருக்கும் யுபிஐ ஐடியை போலவே தான் இந்த கிரெடிட் கார்டு உடனான யுபிஐ ஐடியும் இருக்கும். அடுத்த முறை மேபெண்ட் செய்யும் போது இந்த கிரெடிட் கார்டை கிளிக் செய்து, யுபிஐ ஐடியை போட்டால் அதில் இருந்து பணம் டெபிட் ஆகும்.
தற்போதைய சூழலில் ரூபே வகை கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே இந்த வசதி தரப்பட்டுள்ளது. மாஸ்டர் மற்றும் விசா உள்ளிட்ட கார்டுகளுக்கு இந்த வசதி வழங்கப்படவில்லை. எனவே, உங்களிடம் ரூபே கார்டு இருந்தால் நீங்கள் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம். உங்களிடம் ரூபே கிரெடிட் கார்டு இல்லை என்றாலும் வங்கியில் இருந்து கிரெடிட் கார்டுகளை வாங்கி லிங்க் செய்து கொள்ளலாம்.
ரூபே என்பது இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் ஒரு மேபெண்ட் முறையாகும். எனவே, இந்த கார்டு மூலம் மேபெண்ட் செய்யும் போது பல இடங்களில் நமக்கு சர்வீஸ் சார்ஜ் உள்ளிட்ட கூடுதல் கட்டணங்கள் இருக்காது. எனவே, ரூபே கார்டை வாங்கி லிங்க் செய்து கொண்டால் மாத கடைசியில் கூட இது நமக்கு பயன்படும். அதேநேரம் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது லிமிட் தாண்டி செலவு செய்யும் சூழல் ஏற்படலாம். எனவே, அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!