இந்தியாவில் உள்ள சுமார் 50 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் மோதி துவக்கிவைத்திருக்கிறார்.
ஆனால், தமிழகம் போன்ற பல மாநிலங்களில் ஏற்கனவே மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அவை என்னவாகும்? ஒருவர் இரு திட்டங்களிலும் பயன்பெற முடியுமா?
ஆயுஷ்மான் பாரத் அல்லது ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற பெயரிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாளான செப்டம்பர் 25ஆம் தேதியன்று துவக்கி வைத்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.
இந்தியாவின் வருவாய் குறைந்த 40 சதவீதம் மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டை அளிக்கும் நோக்கத்தில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் அளவுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும்.
இந்தியாவில் உள்ள 10 கோடி குடும்பங்கள் அதாவது 50 கோடிப் பேர் இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள். இது இந்தியாவின் 40 சதவீத மக்கள் தொகையாகும்.
இந்தத் திட்டப் பயனாளிகளுக்கு இதற்கென அட்டை ஒன்று வழங்கப்படும். மருத்துவமனைகள், மாநில அரசுகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தில் இணைவோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணமின்றி சிகிச்சையளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்போ, நோயின் நிலையோ முக்கியமல்ல.
ஏற்கனவே நோயுற்றிருந்தாலும் இந்தத் திட்டத்தில் இணைந்த தினத்திலிருந்து ஏற்கனவே இருக்கும் நோய்க்கும் சிகிச்சைபெறலாம். இந்தியா முழுவதும் எந்த மருத்துவமனையிலும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
இந்தியாவில் ஏற்கனவே பல மாநிலங்களில் இம்மாதிரியான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டிலேயே காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2009 ஜூலை 23ஆம் தேதி முதல் கலைஞர் கருணாநிதி காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் அமலுக்கு வந்த இந்தத் திட்டத்தின்படி 51 நோய்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட்டது.
குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருப்பவர்கள் இதில் பதிவுசெய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே ஆந்திரப் பிரதேசத்தில் அமலில் இருந்த ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டது.
ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தில், காப்பீட்டிற்கான தவணைத் தொகையை பயனாளிகள் கட்ட வேண்டும். ஆனால், தமிழகத்தில் தமிழக அரசே அதைக் கட்டியது.
2011ல் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தத் திட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.
மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
இந்தத் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு நோயைப் பொறுத்து ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை பயன்பெற முடியும்.
மத்திய அரசின் திட்டத்திற்கும் மாநில அரசின் திட்டத்திற்கும் என்ன வித்தியாசம்?
01. தமிழக அரசின் திட்டத்தில் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குக் கீழிருக்கும் எந்த குடும்பம் வேண்டுமானாலும் பயன்பெறலாம். மத்திய அரசின் திட்டம், தேசிய சாம்பிள் சர்வே அமைப்பு மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பிரிவினரைத் தேர்வுசெய்கிறது.
02. தமிழக அரசின் திட்டத்தின் கீழ் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயனடைகின்றன. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தேசிய அளவில் பத்து கோடிக் குடும்பங்களும் தமிழகத்தில் 77 லட்சம் குடும்பங்களும் பயனடைவார்கள்.
03. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சுமார் 1350 சிகிச்சைகளுக்கு காப்பீடு அளிக்கப்படுகிறது. மாநில அரசு 1027 சிகிச்சைகளுக்கு காப்பீடு அளிக்கிறது. இதில் 158 சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பெற முடியும். விரைவில் மத்திய அரசுக்கு இணையாக இந்த காப்பீடு மேம்படுத்தப்படும் என்கிறது மாநில அரசு.
04. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 5 லட்ச ரூபாய்க்குக் காப்பீடு கிடைக்கும். மாநில அரசு திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.
“இந்தியாவிலேயே மிக முன்னோடியாக இம்மாதிரி காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது தமிழகம்தான். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வெறும் 77 லட்சம் குடும்பங்கள்தான் பலன்பெறும். ஆனால், தமிழகத்தில் ஒன்றரைக்கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பலன் பெற்று வருகின்றன” என்கிறார் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம்.
தற்போது தமிழக அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1027 மருத்துவ சிகிச்சைகளுக்கே பயனடைய முடியும். ஆனால் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 1350 மருத்துவ சிகிச்சைகளுக்குப் பலனளிக்கும்.
“தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழும் 1350 சிகிச்சைகளுக்கு பலனளிக்கும் வகையில் திட்டம் மேம்படுத்தப்படும்” என்கிறார் செல்வவிநாயகம்.
தமிழக அரசு ஆண்டு தோறும் மருத்துவக் காப்பீட்டிற்காக சுமார் 1360 கோடி ரூபாய்களை ஒதுக்குகிறது. இதனால், இந்த கூடுதல் சிகிச்சைகளை தமிழகக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழும் வழங்குவதில் சிரமமிருக்காது என்கிறார் செல்வநாயகம்.
ஒருவர் இரண்டு திட்டங்களின் கீழும் பயன்பெற முடியுமா?
முடியாது. “மத்திய அரசின் பயனாளிகள் பட்டியலும் மாநில காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளின் பட்டியலும் ஒருங்கிணைக்கப்படும்.” என்கிறார் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம்.
ஆனால், அரசு இம்மாதிரி காப்பீட்டுத் திட்டங்களை நடத்தவே கூடாது என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி. ரவீந்திரநாத்.
“இது முழுக்க முழுக்க பொதுச் சுகாதாரத் துறையை ஒழித்துக்கட்டும் திட்டம். 10 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படவிருக்கும் காப்பீட்டிற்காக முதலில் 2,000 கோடி ரூபாயும் பிறகு 12,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என்கிறார்கள். இது எப்படி போதுமென்று தெரியவில்லை. அரசின் காப்பீட்டுத் திட்டங்கள் எல்லாமே, அரசு மருத்துவமனைகளை பணம் செலுத்தி மருத்துவம் பார்க்கும் மருத்துவமனைகளாக்கும் திட்டம்தான்” என்கிறார் ஜி. ரவீந்திரநாத்.
இம்மாதிரி பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கெனக் கொண்டுவரப்படும் திட்டங்களால் மத்திய தரவர்க்கம் மிகவும் பாதிக்கப்படும்.
இவர்களால் அரசின் காப்பீட்டுத் திட்டங்களையும் பெற முடியாது. அரசு மருத்துவமனைக்கும் செல்ல முடியாது. தனியார் மருத்துவமனைகளில் பணத்தைக் கொட்டி, வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் என்கிறார் அவர்.
இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசு 1200 கோடி ரூபாய் செலவில் சுகாதார நல மையங்களை செயல்படுத்தும் என அறிவித்தது.
இப்போது இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழும் இந்த சுகாதார நல மையங்கள் இயங்குமெனக் கூறப்பட்டிருக்கிறது.
மாநிலத்தில் உள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையங்களே இந்த சுகாதார நல மையங்களாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப்பொறுப்புத் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களின் பராமரிப்பில் இந்த மையங்களை ஒப்படைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
“தமிழக சுகாதாரக் கட்டமைப்பின் முதுகெலும்பே இந்த ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள்தான். இவர்கள்தான் தடுப்பூசி போடுவது, கர்ப்பிணி பெண்களைக் கவனிப்பது, குடும்பக் கட்டுப்பாடு சாதனங்களை விநியோகிப்பது ஆகியவற்றைச் செய்கிறார்கள். தனியார் நிறுவனங்களின் கையில் போனால், அவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை பரிந்துரை செய்யும் மையங்களாக மாறும் அபாயம் இருக்கிறது” என்கிறார் ரவீந்திரநாத்.
தமிழ்நாடு உட்பட இந்தியாவிலுள்ள 31 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், தில்லி, கேரளா, தெலங்கானா, பஞ்சாப், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் பிரதமரின் திட்டம் குறித்த தங்களது கவலைகளை மத்திய அரசு சரிசெய்யாவிட்டால் அதில் சேரப்போவதில்லையெனத் தெரிவித்துள்ளன.
உதாரணமாக, ஒடிஷாவில் பிஜு ஸ்வஸ்த கல்யாண் யோஜனா என்ற பெயரில் செயல்படுத்தப்படும் காப்பீட்டுத் திட்டத்தில் பெண்களுக்கு அதிகபட்சமாக 7 லட்ச ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
ஆனால், பிரதமரின் திட்டத்தில் அதிக பட்சம் 5 லட்ச ரூபாய் மட்டுமே கிடைக்கும் என்பதால் இதை ஏற்கப்போவதில்லை என்கிறது ஒடிஷா அரசு.
தெலங்கானாவைப் பொறத்தவரை தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் ஆரோக்ய ஸ்ரீ திட்டம் மாநிலத்தின் 70 சதவீதம் பேருக்கு பலனளிக்கும் நிலையில் வெறும் 80 லட்சம் பேருக்கு பலனளிக்கும் பிரதமரின் திட்டத்தை ஏன் ஏற்க வேண்டுமெனக் கேள்வியெழுப்புகிறது.
மேலும் ஆயுஷ்மான் பாரத் திட்ட அட்டையில் பிரதமரின் படம் இடம்பெறுவதும் மாநில அரசுக்கு பிடித்தமானதாக இல்லை.
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் - முழு விவரம்தமிழில் படிக்க… Read More
ஏழை, எளிய விவசாய கூலிகளாகவே இருப்பவர்களை ’நன்னிலம் திட்டம்’ மூலம் அவர்களை நில உடைமைதாரர்களாக மாற்றும் மாபெரும் சமூக நீதி… Read More
Tamil Nadu Uniformed Service Recruitment Board (TNUSRB) has announced a total of 3644 vacancies for… Read More
Gold Rate Today in Tamil Nadu (14 August 2025) – 22K & 24K Price Updates… Read More
Gold Appraisal Read More
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை; 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்அரசு வழக்கு துறையின் தமிழ்நாடு அரசு தலைமை… Read More