சென்னை: அருண் விஜய்க்கு என்ன ஆச்சு, மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
நெப்போடிசம் எனப்படும் வாரிசுகளுக்கான மவுசு எல்லா தொழிலிலும் இருக்கிறது. ஆனால் அவர்கள் சோபிப்பது முழுவதும் அவர்களுடைய சொந்த திறமையினால் மட்டுமே இருக்கிறது. சினிமா துறையில் நடிகர் விஜயகுமார் வெற்றி பெற்ற நடிகராக அறியப்படுகிறார்.
ஆனால் அவருடைய மகன் அருண் விஜய் சினிமாவுக்கு வந்த போது அவரது திரைப்படங்களில் சில வெற்றி பெறவில்லை. சுமார் 22 ஆண்டுகளாக ஹிட் படத்திற்காக அருண் விஜய் காத்துக் கொண்டிருந்தார்.
அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்ததை அடுத்து அந்த படம் இவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்தது. இதையடுத்து யானை உள்ளிட்ட படங்களில் அருண் விஜய் நடித்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் மிஷன் சாப்டர் 1 படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் எமி ஜாக்சன் நடித்திருந்தார்.
பொங்கலுக்கு இந்த படம் வெளியானது. இந்த நிலையில் அருண் விஜய் திடீரென உணர்ச்சிகரமான பதிவை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மிஷன் சாப்டர் 1 படத்தை வெற்றி பெற செய்துள்ளீர்கள். இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்த போது எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
தசை நாரும் கிழிந்துவிட்டதால் இரு மாதங்களாக நான் அனுபவித்த வலியை சொல்லி மாளாது. ஆனாலும் படத்தின் வெற்றி அந்த வலியை மறக்கடித்தது. உங்களுடைய அன்பு என்னை மீண்டும் அதிக வலிமையாக மாற்றியிருக்கிறது. ஆக்ஷனில் விரைவில் களமிறங்குவோம் என கூறியிருந்தார்.
இதற்கு முன்னதாகவே அருண் விஜய் தன்னுடைய மிஷன் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ள மதுரை சென்றிருந்தார். அப்போது தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டான மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார்.
இந்த விழாவில் அருண் விஜய் பேட்டி அளித்த போது எனக்கு நீண்ட நாட்களாக ஜல்லிக்கட்டு சம்பந்தமாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. என்னுடைய படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடக் கூடாது என நினைப்பேன். அப்படிதான் மிஷன் படத்திலும் நான் நடித்திருக்கிறேன். தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கக் கூடிய கதைகளில் நடிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது. இரு மாதங்களாக நான் பெட் ரெஸ்டில்தான் இருக்கிறேன். 10 நாட்களில் நான் சரியாகிவிடுவேன் என கூறியிருந்தார்.