தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணையதளத்தில் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளின் விவரங்கள், அவற்றுக்கு விண்ணப்பிக்கும் வசதி ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், 62 திட்டங்களில் உள்ள 22,049 வீடுகள் விற்பனைக்கு உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வீடுகளை மானிய விலையுடன் தமிழக அரசு விற்பனை செய்கிறது.
மானிய விலை?: இந்த அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டப்படும் விலைக்கு விற்கப்படுவதில்லை. ஏனென்றால், இந்த வீடுகளைக் கட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்குகின்றன. குறிப்பாக மத்திய அரசு ரூ.1.50 லட்சமும், மாநில அரசு ரூ.7.50 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரையும் மானியம் வழங்குகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?: தமிழக அரசின் வரையறைப்படி, நகர்ப்பகுதிகளில் அமைந்துள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள், ஆட்சேபனை அரசு புறம்போக்கு நிலங்களான நீர்நிலைப் பகுதிகள், காப்புக்காடுகள், வெள்ளசேத பகுதிகள், கடலோர பகுதிகளில், சாலையோரத்தில் வசிப்பவர்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், அரசின் திட்டப் பணிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளைப் பெறலாம். எனினும், இந்தக் குடியிருப்பைப் பெற மிக முக்கியமான தகுதி குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?: இந்த வீடுகளைப் பெற விரும்பும் மக்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணையதளமான www.tnuhdb.org.in என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். அந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ‘வீடு வேண்டி விண்ணப்பம்’ தலைப்பில் உள்ள பிரிவைக் கிளிக் செய்து மிக எளிமையான முறையில் விண்ணப்பிக்கலாம். இதில் எந்த இடத்தில் எத்தனை வீடுகள் உள்ளது, அவற்றின் விலை எவ்வளவு என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.
விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், ரூ.3 லட்சத்துக்கான வருமானச் சான்று, ரேஷன் கார்டு, தங்களுக்கு எங்கும் வீடு இல்லை என்பதற்கான உறுதிமொழி பத்திரம் ஆகியவை கட்டாயம். இவற்றை வைத்திருப்பவர்கள் விண்ணப்பித்தால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும். 90 நாட்கள் பணம் செலுத்தக் கால அவகாசமும் வழங்கப்படுகிறது. பணம் செலுத்தியவுடன் வீடுகள் ஒப்படைக்கப்பட்டாலும், 5 ஆண்டுகளுக்குப் பிறகே குடியிருப்புகளுக்கான பத்திரம் ஒப்படைக்கப்படும்.