டெல்லி: மே 31ம் தேதியுடன் நான்காவது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வர உள்ளது. இதன்பிறகு 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாம். எந்த மாதிரியான நடவடிக்கைகள் இந்த ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்படும்? எப்படி கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்படும் என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் முதல், அடுத்தடுத்து லாக்டவுன்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
ஒவ்வொரு முறையும் புதிய, தளர்வுகளுடன், லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஓரளவுக்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ஆனால், இன்னமும் கூட பல மாநிலங்களில் பொதுப்போக்குவரத்து துவங்கவில்லை.
அடுத்தகட்டம்
இந்த நிலையில்தான் மே 31ம் தேதியுடன், நான்காவது கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. இதன் பிறகு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றி அரசு வட்டாரங்கள் மூலம் சில தகவல்கள் கசிந்துள்ளன. அதுகுறித்த ஒரு பார்வை: மே 31ம் தேதிக்கு பிறகு எந்த மாதிரி லாக்டவுன் நடவடிக்கைகள் எடுத்து பிரச்சனையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கான முழு சுதந்திரமும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளுக்கு வழங்கப்படும்.
ஜூன் 15ம் தேதிவரை லாக்டவுன்
15 நாட்களுக்கு ஒரு முறை என்ற விகிதத்தில் லாக்டவுன் மாற்றி அமைக்கப்படும். அதாவது 5வது கட்ட லாக்டவுன் ஜூன் 15ம் தேதிவரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மே 17 ஆம் தேதி நான்காவது கட்ட ஊரடங்கு பற்றி அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள், கல்வி நிலையங்கள், மத வழிபாட்டுத்தலங்கள் போன்றவை செயல்படவும், ஷாப்பிங் மால்கள், சினிமா திரையரங்குகள் போன்றவை செயல்படவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
கர்நாடக அரசு உத்தரவு
ஆனால் உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்குவதாக சிவில் ஏவியேஷன் துறை திடீரென அறிவித்து சேவைகளும் தொடங்கிவிட்டன. இன்னொரு பக்கம் கர்நாடக அரசு ஜூன் 1-ஆம் தேதி முதல் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்கப் போவதாக அறிவித்துள்ளது. மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது என்பதற்கான ஒரு முன்னுதாரணமாக கர்நாடக அரசின் நடவடிக்கைகள் பார்க்கப்படுகிறது.
11 நகரங்கள்
அதேநேரம் மாநிலங்களுக்கு, முழு சுதந்திரம் கொடுத்தாலும், 11 நகரங்களை மத்திய அரசு நேரடியாக கண்காணிக்க உள்ளது. இந்த நகரங்களில்தான் ஒட்டுமொத்த நாட்டின் கொரோனா வைரஸ் பாதிப்பில் 70% அளவுக்கு நோயாளிகள் உள்ளனர். டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா அகமதாபாத் ஆகிய 6 மெட்ரோ நகரங்களும் இதில் உள்ளன. இது தவிர புனே, தானே, ஜெய்ப்பூர், சூரத் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களும் இந்த 11 நகர பட்டியலில் உள்ளன.
தடை தொடரும்
அதேநேரம், மே 31ம் தேதிக்கு பிறகான ஊரடங்கின்போது, மால்கள், சினிமா, தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான விதிமுறைகள் அடங்கிய பட்டியல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளன.