சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வரும் 16ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
ஆனால், கொரோனா தொற்று இன்னும் முழுமையாக அகலவில்லை என்பதால், அரசின் அறிவிப்புக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெற்றோர்
அதனால், இந்த விவகாரம் குறித்து பெற்றோரிடமே கருத்து கேட்கலாம் என்று அரசு முடிவு செய்தது.. அதன்படியே தமிழகம் முழுவதும் பெற்றோர்கள், பொதுமக்களிடம் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டமும் நடந்து முடிந்தது.. இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு, தங்கள் தரப்பு கருத்தை சொன்னார்கள்.. கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத பெற்றோர்கள், மெசேஜ் மூலம் தங்களின் கருத்தை பதிவிட்டனர்.
குழந்தைகள்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை சொன்னார்கள்.. “எப்ப பார்த்தாலும் குழந்தைகள் வீட்டில் விளையாடுகிறார்கள்” என்றனர்.. “வீட்டில் அவர்களின் சேட்டை தாங்க முடியவில்லை” என்றனர் சிலர். மேலும் பலரோ,”குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளதால் கொரோனா பரவலும் அதிகரிக்கும், பொங்கல் லீவு முடிந்தபிறகே பள்ளிகளை திறக்கலாம்” என்றனர்.
எடப்பாடி பழனிசாமி
இப்படிப்பட்ட சூழலில்தான் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பு குறித்து பேட்டி தந்துள்ளார்.. கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சொன்னதாவது: “பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 12-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்… 45% பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
யூனிபார்ம்
பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது… மாணவர்களுக்கு யூனிபார்ம், மற்றும் செருப்புகள் தயாராக உள்ளன.. 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகின்றனர்… வரும் 12-ம் தேதி முதலமைச்சருடன் ஆலோசித்த பிறகே ஆன்லைன் கிளாஸ் அல்லது டிவி மூலம் கல்வி வழங்கப்படும்” என்றார்.