Land and housing scheme
ஊரகப் பகுதிகளில் நிலமற்ற, வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு நிலம் வழங்கி ஊரக வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க சிறப்புப் பணிப்பிரிவு (Task Force) அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ’’குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்பதே இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். 2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடையும் பொருட்டு, ஊரகப் பகுதிகளில் வாழும் வீடு இல்லாத, குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்குத் தேவையான நிலையான வீடு கட்டிக் கொடுப்பதே பிரதம மந்திரி குடியிருப்பு (ஊரகம்) திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.
சிறப்புப் பணிப்பிரிவு
இத்திட்டத்தின் பயனாளிகள் 2011-ன் சமூக, பொருளாதாரக் கணக்கெடுப்பபின் நிரந்தரக் காத்திருப்போர் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இத்திட்டம் நிலமற்றோருக்கு முன்னுரிமை அளித்தபோதிலும், நிலமற்ற பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் வீடுகள் பெற இயலாத நிலை உள்ளது. மேலும், பிரதம மந்திரி குடியிருப்பு (ஊரகம்) திட்டத்தினை விரைவுபடுத்தி, வீடுகள் கட்டும் பணியினைத் துரிதப்படுத்த இயலவில்லை.
எனவே, நிலமற்ற பயனாளிகளுக்கு, நிலம் வழங்கி, வீடுகள் கட்டும் பணியினைத் துரிதப்படுத்திட, அரசு செயலாளர் (வருவாய்) மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு (ஊரகம்) திட்டத்தினைச் செயல்படுத்தும் அரசு செயலாளரைக் கொண்ட சிறப்புப் பணிப்பிரிவை (Task Force) அமைக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
குடிசைகளே இல்லாத தமிழகம்
இதனடிப்படையில், இத்திட்டத்தின் செயலாக்கத்தினை விரைவுபடுத்தவும், 2011-ன் சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பின் நிரந்தரக் காத்திருப்போர் பட்டியலிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நிலமற்ற பயனாளிகளுக்கு, விரைவில் நிலம் ஒதுக்கீடு செய்யும் பொருட்டு, இந்த அரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அரசு முதன்மைச் செயலாளரைத் தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு முதன்மைச் செயலாளரைத் துணைத் தலைவராகவும், நில நிர்வாக ஆணையரை உறுப்பினராகவும் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் இயக்குநரை உறுப்பினர்/ செயலராகவும் கொண்ட சிறப்பு பணிப்பிரிவு (Task Force) அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இத்திட்டத்தினை விரைவுபடுத்தி, நிலமற்ற பயனாளிகளுக்கு நிலம் வழங்கி, குடிசைகளே இல்லாத தமிழகம் என்ற குறிக்கோளை எய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.