வேலை நாடும் இளைஞர்களையும் தனியார் துறை நிறுவனங்களையும் இணைக்கும் நோக்கில் அரசின் சார்பில் வேலைவாய்ப்பு இணையதளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 17) வெளியிட்ட செய்தி வெளியீடு:
“முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூன் 16) தலைமைச் செயலகத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில், தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து, வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ ‘Tamil Nadu Private Job portal’ (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களின் கல்வித் தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணி வாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடவும், காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்வதற்கும் இந்த இணையதளம் வழிவகை செய்யும்.
வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு இச்சேவைகள், கட்டணமின்றி தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். ஏற்கெனவே அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் சிறிய மற்றும் பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய சூழ்நிலையில், இதற்கு மாற்றாக ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ மூலம், இணையவழி நேர்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டிலுள்ள வேலைநாடும் இளைஞர்களை, இணைய வழியாக தொடர்பு கொண்டு, தனியார் துறை வேலையளிப்போர்கள் பணி வாய்ப்புகளை அளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு போட்டித் தேர்வுக்கான நீட் பயிற்சி அளித்திடும் வகையில், “NEET-2020” இணையதள (Online) பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தேன். https://t.co/GhHqtE4FKQ