ஆப்பிள் விதைகளில் சயனைடு என்னும் கொடிய விஷம் இருப்பதாகவும், ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெண் ஒருவர் ஆப்பிள் விதைகளைக் கொடுத்து தனது கணவரைக் கொன்றதாகவும் வாட்ஸ்ஆப் செய்தி ஒன்று பரவுகிறது. மேலும் அதில், ‘ஆப்பிள் பழம் சாப்பிடும்போது விதைகளை அகற்றிவிட்டு கவனமாகச் சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு முழு ஆப்பிளை சாப்பிடக் கொடுக்காதீர்கள். அப்படியே கொடுத்தாலும் விதைகளை அகற்றிவிட்டுக் கொடுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Apple Seed
ஆப்பிள் பழம் சத்து நிறைந்த ஒரு பழம் என்பதால், பெரும்பாலான நோயாளிகளுக்கு அது பரிந்துரைக்கப்படுகிறது. ஊட்டம் நிறைந்த ஆப்பிள் பழத்தின் உள்ளே இருக்கும் அதன் விதையில், ஆளையே கொல்லுமளவுக்கு சயனைடு விஷம் இருக்கிறது என்பது உண்மையா? சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம்.
Apple Seeds
“ஆப்பிள் விதையில் மட்டுமல்ல… ஆப்ரிகாட், செர்ரி, பிளம்ஸ் உள்ளிட்ட பல்வேறு பழங்களின் விதைகளில் அவற்றைப் பாதுகாப்பதற்காக இயற்கையாக உருவாகும் ஒருவித நச்சு ரசாயனமான அமிக்டாலின் (Amygdalin) உருவாகும். அது, விதைகள் அப்படியே இருக்கும்போது எந்தவிதக் கெடுதலையும் ஏற்படுத்தாது. ஆனால், விதைகள் சேதமடையும்போது, அதாவது நாம் அவற்றை மெல்லும்போதும் அவை செரிக்கப்படும்போதும் விதைகளில் உள்ள அமிக்டாலின் ரசாயனம் ஹைட்ரஜன் சயனைடாக மாற்றமடையும். அப்போது அது விஷத்தன்மை கொண்டதாக மாறும். அது அளவில் அதிகரிக்கும்போது ஆபத்தையும் ஏற்படுத்தும்.
Sivaraman
உடனே, ஆப்பிள் விதை விஷத்தன்மை வாய்ந்தது என்று பயப்பட வேண்டாம். இந்த விதைகளை ஒரு கப் அளவுக்கும் அதிகமாகச் சாப்பிட்டால்தான், ஆபத்தை ஏற்படுத்தும். நாம் ஆப்பிள் பழங்களைச் சாப்பிடும்போது ஒன்றிரண்டு விதைகள் தெரிந்தோ தெரியாமலோ நம் வயிற்றுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே சொன்னதுபோல, ஒரு கப் அளவு சாப்பிட நேரிடும்போது இதயம், மூளையை பாதிக்கும். மூச்சுத்திணறல், இதயத்துடிப்பில் மாற்றம், ரத்த அழுத்தம் குறைதல் போன்ற நிலை ஏற்படலாம். சில நேரம் கோமாநிலைக்கும் கொண்டு சென்று இறப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அப்படி யாரும் அதிகளவில் ஆப்பிள் விதைகளைச் சேகரித்துச் சாப்பிடுவதில்லை என்பதால் பீதியடைய வேண்டாம்.
Apple seeds
வாட்ஸ்அப்பில் உலாவரும் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி நாம் அறியாவிட்டாலும், அதிலும்கூட அந்தப் பெண் திட்டமிட்டு தன் கணவரைக் கொல்வதற்காக அளவுக்கு அதிகமாக ஆப்பிள் விதைகளைச் சேகரித்துப் பயன்படுத்தியிருப்பதாகவே கூறப்பட்டுள்ளது. எனவே, நார்மலாக ஒருவர் ஆப்பிள் சாப்பிடும்போது தவறுதலாக ஒன்றிரண்டு விதைகள் வயிற்றுக்குள் செல்ல நேர்ந்தால் எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. விதைகளை அகற்றிவிட்டு ஆப்பிளைச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்வது நலம்” என்றார்