தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திமுகவின் திட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது. மகளிருக்கு பணம் வழங்கும் பணிகளுக்கான விவரங்களை சேகரிக்க கூட்டுறவு மற்றும் உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் போது திமுக சார்பில் பல வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டது. அதில் பல வாக்குறுதிகள் செயல்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. அந்த வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் திட்டத்தை உடனே அமுல்படுத்த வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுத்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலர் அலுவலகத்தில், பொது விநியோக திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. அதில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், உணவு வழங்கல் ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் குடும்ப தலைவிகளிடம் இருந்து அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை சேகரிக்கும் படி உத்தரவிடப்பட்டது.
மேலும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கின் விவரங்களை பெறவும், வங்கி கணக்கு இல்லாதவர்களை விரைந்து வங்கி கணக்கு துவங்கவும் அறிவுறுத்த கூறப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் உணவு வழங்கல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விவரங்களை சேகரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.