சென்னை: தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு இன்று (28 ம் தேதி) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கோவிட் 19 தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று கட்டுக்குள் வரவில்லை. மேலும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுப்படும் என செய்திகள் வெளியாயின.
தமிழகத்தில் கோவிட் 19 தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த மே.22-ம் தேதியன்று நடந்த சட்டசபை கட்சித்தலைவர்கள் கருத்துக்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களின் அடிப்படையில் கோவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மே.24 அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு வரும் மே., 31ம்- தேதி காலை 6 மணிக்கு நிறைவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஜூன் 7 -ம் காலை 6 மணி வரை முழு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி,
* முழு ஊரடங்கு காலத்தில் நடைமுறையில் இருந்து வரும் காய்கறி /பழங்கள் நடமாடும் வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டி மூலம் விற்பனை தொடரும். இதில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று வழங்க அனுமதிக்கப்படும்.
* 13 வகை மளிகை பொருட்கள் அடங்கிய ரேஷன் தொகுப்புகள் கடைகளில் ஜூன் மாதம் முதல் இலவசமாக வழங்கப்படும்.
* மளிகை பொருட்களை அந்தந்த பகுதிகளில் வாகனங்கள், தள்ளுவண்டிகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
* கோவிட் 19 தொற்று நோயை கட்டுப்படுத்த பொதுமக்களின் நலன் கருதி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
முழுஊரடங்கையொட்டி பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கெள்கிறேன். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.