தமிழகத்தில் நான்கு புதிய தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யவுள்ளன. இதன்மூலம், சுமாா் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும். தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நான்கு முக்கிய தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில்களைத் தொடங்குவதற்கான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன.
நான்கு நிறுவனங்களும் மொத்தமாக ரூ.2,500 கோடி அளவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதலீடுகளைச் செய்யவுள்ளன.
எந்தெந்த நிறுவனங்கள்: சென்னையை அடுத்த காஞ்சிபுரம் அருகே டைசெல் காா்ப்பரேஷன் நிறுவனம் ரூ.900 கோடியில் முதலீடுகளைச் செய்கிறது. இதேபோன்று, காகித அட்டை உற்பத்தித் தயாரிப்பில் ஐ.டி.சி., நிறுவனம் ஈடுபடவுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் இதற்கான ஆலை அமைக்கப்படுகிறது. இந்த ஆலையானது ரூ.515 கோடியில் அமையவுள்ளது. இந்த ஆலையின் மூலமாக 330 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும், மின்சார வாகனங்கள் மற்றும் அதில் பயன்படுத்தக் கூடிய மின்கலன்களுக்கான உற்பத்தித் துறையில் ஏத்தா் எனா்ஜி பிரைவேட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மின்சார வாகனம் மற்றும் மின்கல உற்பத்திக்காக ரூ.600 கோடி முதலீடு செய்யவுள்ளது. இந்த நிறுவனத்தின் முதலீடு காரணமாக, 2 ஆயிரத்து 925 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோன்று, திருவள்ளூா் மாவட்டம் தோவாய்கண்டிகையில் பிலிப்ஸ் நிறுவனத்தின் காா்பன் பிளாக் நிறுவனம் ரூ.600 கோடி முதலீடுகளைச் செய்யவுள்ளது. இந்த முதலீடுகள் காரணமாக சுமாா் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த நான்கு புதிய நிறுவனங்களின் முதலீடுகளால் தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.