சென்னை: தமிழகத்தில் ஜூன் 1 முதல் 50 சதவீத பஸ்கள் , 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் இன்றுடன் முடிவடையும் ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக பஸ் இயக்கப்பட உள்ளதாக முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளா்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தில் பஸ் போக்குவரத்தை ஜூன் 1 முதல் நடைமுறைபடுத்த தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.
மண்டலம் -1: கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்
மண்டலம்- 2: தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி
மண்டலம் -3: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி
மண்டலம் -4: நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
மண்டலம்-5: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்
மண்டலம்-6: தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
மண்டலம்- 7: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
மண்டலம்- 8: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி
ழ
* காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்படும்.
* காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பஸ் போக்குவரத்திற்கு தடை தொடரும்
* அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பஸ்களும் இயங்க அனுமதி
* பஸ்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி
* மண்டலங்களுக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ – பாஸ் தேவையில்லை. பஸ்களில் பயணிக்கவும் இ-பாஸ் தேவையில்லை
* அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயுமான பஸ் போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.
* அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற பஸ்கள் இயக்கப்படும்.
பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்
நாளை பஸ்கள் இயக்கம் துவங்குவதை முன்னிட்டு அரசு பஸ் போக்குவரத்து துறை சார்பில் தமிழக அரசு வழிகாட்டுமுறை வெளியிட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு:
* பயணிகள் பின்புற படிக்கட்டில் ஏற வேண்டும்
* பஸ்களில் பயணிகள் மாஸ்க் அணிவது அவசியம்
* டிரைவர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும்
* குளிர்சாதன வசதி பஸ்கள் இயக்கப்படாது, குளிர்சாதனம் அணைக்கப்பட்டு இயங்கலாம்
* பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்கள் கிருமி நாசினி கொண்டு ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்ய வேண்டும்.
* படிக்கட்டில் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
* சென்னையில் இருந்து பிற மாவட்டஙகளுக்கு செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம். அறிகுறி இல்லாவிடினும் பரிசோதனை அவசியம். பரிசோதனையில் கொரோனா உறுதியானால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். இல்லாவிடில், வீடுகளில் 7 நாட்கள் வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்.
இ -பாஸ் முறை
*அனைத்து வகையான வாகனங்களுக்கும் மண்டலங்களுக்குள் இயங்க அனுமதிக்கப்படும். அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை
* வெளி மாநிலத்திற்கு செல்லவும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரவும், மண்டலங்களுக்கு இடையே சென்று வரவும் இ – பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.