சென்னை : கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கும், பாதிப்பு காரணமாக நீட்டிக்கப்பட்டே வருகிறது. இந்த சூழலில், ஜுன் 1-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது.
பிறகு, முதலமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, அந்தத் தேர்வு ஜுன் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாணவர்களுக்கு தேவையான பேருந்து வசதி மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக தேர்வு அறைகள் அதிகரிப்பு என அடுத்தடுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுத்தேர்வை உறுதி படுத்தும் விதமாக, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகளும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேர்வு நடத்தும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது, தேர்வு நடத்தும் அதிகாரிகளுக்கு மட்டுமின்றி தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின் முடிவில் தேர்வை திட்டமிட்டபடி நடத்தவதா..? அல்லது ஒத்தி வைப்பதா..? என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து தமிழக அரசு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.. 10 வகுப்பு தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
By
Posted on