கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் வேலை மற்றும் வருமானம் இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு உணவு தானியங்கள், சமையல் கியாஸ், பண உதவி வழங்கும் வகையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அந்த வகையில் பெண்களுக்கு உதவும் வகையில் ஏப்ரல் மாதம் முதல் 3 மாதங்களுக்கு அவர்களுடைய ஜன்தன் வங்கி கணக்குகளில் தலா ரூ.500 செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பெண்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் முதல் தவணையாக கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு தலா ரூ.500 செலுத்தியது. அந்த வகையில் 20 கோடியே 5 லட்சம் வங்கி கணக்குகளில் ஏப்ரல் 22-ந் தேதி வரை ரூ.10 ஆயிரத்து 25 கோடி செலுத்தப்பட்டது.
இந்தநிலையில் அடுத்த தவணை தொகை தொடர்பாக நிதி சேவைகள் துறை செயலாளர் தேபசிஷ் பண்டா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் பெண் பயனாளிகளின் வங்கி கணக்கில் 2-வது தவணையாக மே மாதத்துக்கான தொகை ரூ.500 திங்கட்கிழமை (இன்று) முதல் 5 நாட்களில் செலுத்தப்படுகிறது. பூஜ்ஜியம் மற்றும் ஒன்று முடியும் என்ற வங்கி கணக்கு எண் கொண்டவர்கள் 4-ந் தேதி (நாளை)தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதேபோல் வங்கி கணக்கு எண் 2 அல்லது 3 என்று முடிந்தால் 5-ந் தேதியும், 4 அல்லது 5 என்று முடிந்தால் 6-ந் தேதியும், 6 அல்லது 7 என்று முடிந்தால் 8-ந் தேதியும், 8 அல்லது 9 என்று முடிந்தால் 11-ந் தேதியும் வங்கிக்கு சென்று தங்கள் கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஏ.டி.எம். மூலமாகவும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.