தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை வழங்கப்படும். இது, யூபிஐயுடன் இணைக்கப்படும்.
ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன்களை வழங்கும் ‘பிரதம மந்திரி ஸ்வாநிதி திட்டம்’ (PM SVANIdhi) என்று அழைக்கப்படும் தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்ம நிர்பார் நிதி திட்டம், கடந்த 2020 ஜூன் 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தெருவோர வியாபாரிகள் தங்களது கடனை குறைந்த வட்டியில் பெறுவதோடு, அந்த கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதன் மூலம், அடுத்த தவணையாக அதிகபட்சக் கடனுக்குத் தகுதி பெறமுடியும். இதன் மூலம் வியாபாரிகளின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இந்த திட்டம் உதவுகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக வியாபாரிகளுக்கு முதல் தவணையாக ரூ.10,000/- கடனாக வழங்கப்படுகிறது. இதனை மாதாந்திர தவணையாக 12 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். இதனையடுத்து 2-வது தவணையாக ரூ.20,000/- வழங்கப்படுகிறது. இந்த இரண்டாவது தவணையை அதிகபட்சமாக 18 மாதங்களில் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். மேலும் அடுத்த சுழற்சிக்கான கடனுக்குத் தகுதிபெற குறைந்தபட்சமாக 6 மாதங்களில் கூட கடனை திருப்பிச் செலுத்திக்கொள்ள முடியும். 3-வது தவணையாக ரூ.50,000/- வழங்கப்படுகிறது. இதை மாதாந்திர தவணையாக 36 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
மேலும் இந்த திட்டத்தில் ‘தெருவோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் தெருவோர விற்பனையை ஒழுங்குபடுத்துதல் சட்டம், 2014‘ – ன் கீழ் விதிகள் மற்றும் திட்டத்தை அறிவித்துள்ள மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மட்டுமே பயன்பெற முடியும்.
இதன் மூலம் பெருநகர அல்லது நகரப் பகுதிகளைச் (metropolitan regions/peri-metropolitan/country regions) சுற்றியுள்ள சுமார் 50 லட்சம் சாலை வியாபாரிகளுக்கு, எந்தவித உத்தரவாதமும் (guarantee free) அவர்களிடமிருந்து பெறாமலே முன்பணமாக 10,000/- வரை வழங்கப்படுகிறது.
மேலும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் இந்த திட்டத்தின் நோக்கங்களை திருத்துவத்தோடு, ஜூலை 1, 2023 முதல் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது. எனவே 2023-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த திட்டத்திற்கான நோக்கங்களை அடைய, தங்களுக்கான இலக்குகளை ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கு கீழ் உள்ள நகரங்களுக்கு நிர்ணயித்துள்ளன.
பிரதமர் ஸ்வாநிதியின் கீழ் கடன் வழங்கும் நிறுவனங்கள்
-
- திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள்
- பிராந்திய கிராமப்புற வங்கிகள்
- கூட்டுறவு வங்கிகள்
- வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC)
- மைக்ரோ-நிதி நிறுவனங்கள் (MFI)
- சுய உதவி குழுக்கள் (SHG) வங்கிகள்
- DPA மூலம் கடன் வழங்குதல்
தகுதி வரம்புகள்:
- மார்ச் 24, 2020 அன்று அல்லது அதற்கு முன் வரை நகர்ப்புறங்களில் விற்பனையில் பங்கேற்றுள்ள அனைத்து தெருவோர வியாபாரிகளும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.
- தகுதிவாய்ந்த பயனாளிகள் பின்வரும் படிநிலைகளில் வகைப்படுத்தப்படுகிறார்கள்
-
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் (ULBs) மூலம் வழங்கப்படும் விநியோக அட்டைகளை (Distributing/Personality Card) பெற்றுள்ள வியாபாரிகள்
- பொதுவாக இதுகுறித்த கணக்கெடுப்பு தொடங்கும் காலக்கட்டங்களில் அங்கீகரிக்கப்படும் வியாபாரிகளுக்கு விற்பனைச் சான்றிதழ்/அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. அத்தகைய விற்பனையாளர்களுக்கு IT-தளங்களின் மூலம் தற்காலிகமாக விற்பனைச் சான்றிதழ் வழங்கப்படும். அவ்வாறு தற்காலிகமாக விற்பனைச் சான்றிதழ் பெற்றவர்கள், நிரந்தர விற்பனைச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை தோராயமாக ஒரு மாத காலத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் (ULBs) மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- இத்தகைய கணக்கெடுப்புகளில் கலந்துகொள்ளாத வியாபாரிகள் மற்றும் கணக்கெடுப்பு முடிந்தவுடன் விற்பனை செய்ய தொடங்கிய வியாபாரிகள் ULB விற்பனைக் குழுவால் (TVC) வழங்கப்படும் பரிந்துரைக் கடிதத்தை (LoR) பெற்றுக்கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு ULB-க்கும் உட்பட்ட வரம்புகளில் உள்ள நகரங்களில் விற்பனை செய்யும் தெருவோர வியாபாரிகள் ULB/TVC மூலம் பெறப்படும் பரிந்துரைக் கடிதத்தைப் (LoR) பெற்றுக்கொள்ள வேண்டும்.
-
விண்ணப்பிக்கத் தேவையானவைகள்:
1 . விற்பனைச் சான்றுகள்
-
- விற்பனையாளர் அடையாள அட்டை (Vendor ID card (VID))
- விற்பனைச் சான்றிதழ் (Certificate of vending (CoV))
- TVC மூலம் வழங்கப்படும் பரிந்துரைக் கடிதம் (TVC Letter of recommendation)
2. KYC ஆவணங்கள்
3. ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு
4. ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்
KYC ஆவணங்களாக பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்:
-
- ஆதார் அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- MNREGA அட்டை
- பான் கார்டு
எப்படி விண்ணப்பிப்பது ?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன், நீங்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்தை (common service centre) தொடர்பு கொள்ளலாம். அங்கு உங்களுடைய கடன் விண்ணப்பமானது கிராமப்புற தொழில்முனைவோர் என்று அழைக்கப்படுகின்ற VLE-களால் நிரப்பப்படும். பின்பு அந்த மையங்களில் ஆவணங்கள் பதிவேற்றப்படும். இதற்காக விண்ணப்பதாரரிடமிருந்து சேவைக் கட்டணமாக ₹ 59 பெறப்படும்.
ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் பின்வரும் வடிவங்களில் ஊக்கத்தொகைகள் கிடைக்கின்றன:
1 . கடனை சரியான தவணைகளில் திருப்பி செலுத்துவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் 7% வட்டி மானியம் வழங்கப்படும்.
2 . பரிந்துரைக்கப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ 1200/- வரை வியாபாரிகளுக்கு வெகுமதியாக பணம் திரும்ப (Cashback) வழங்கப்படுகிறது.
3. கடன்களை சரியான முறையில் திரும்ப செலுத்துவதன் மூலம் அடுத்த கட்டமாக அதிகபட்ச கடனை பெறுவதற்கான தகுதியை வியாபாரிகள் பெற முடியும்.
இந்தத் திட்டத்திற்கான கணக்கெடுப்பு பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்?
பி.எம்.எஸ்.வி.நிதி இணையதளத்தில் விற்பனையாளர் தங்களுடைய அடையாள எண்களை (Vendor Id Card Number) நேரடியாக உள்ளீடு செய்து இங்கு உறுதிபடுத்திக் கொள்ள முடியும்.
பயனாளிகள்:
நவம்பர் 30, 2022 அன்று கிடைத்த தரவுகளின்படி, 31.73 லட்சம் தெருவோர வியாபாரிகள் முதல்தவணை கடனாக ₹10,000 பெற்றுள்ளனர். மேலும் 5.81 லட்சம் பேர் இரண்டாவது தவணை கடனாக ₹20,000 பெற்று பயனடைந்துள்ளனர். இவர்களில் 6,926 தெருவோர வியாபாரிகள் ₹50,000 வரை மூன்றாவது தவணையாக கடன் பெற்று பயனடைந்துள்ளனர். இந்த பயனாளிகளில் 43 சதவீதம் பேர் பெண்கள்.
2023 அக்டோபர் 3ம் தேதி அன்று, இந்த கூட்டு முயற்சி கட்டமைப்பின் மூலம், குறிப்பிடத்தக்க வகையில் 65.75 லட்சம் வரை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன, இதன் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருவோர சிறு வியாபாரிகள் பயனடைந்துள்ளனர், இதன் மொத்த மதிப்பு ரூ 8,600 கோடிக்கும் அதிகம். இதில், 2020-21 முதல் 2021-22 வரையில் தமிழ்நாட்டில் இருந்து 1,59,899 வியாபாரிகளும், அதிகபட்சமாக 7,75,701 வியாபாரிகளும் பயனடைந்து உள்ளதாக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1881759
https://web.umang.gov.in/landing/department/pm-svanidhi.html
https://csc.gov.in/new_newsletter/images/2020/Jul/Frequently-Asked-Questions-PM-Svanidhi.pdf744