சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோ முடிந்து கீழே இறங்கும் போது அந்த பக்கமாக திரும்பி நின்ற எடப்பாடி பழனிசாமியை தொட்டு கீழே இறங்குங்கள் என்று மோடி சொல்லுவது போல் அலர்ட் செய்து கூறினார்.
தமிழக அரசியல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே தேர்தலுக்கு இருக்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் தினமும் ஓய்வின்றி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமியும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரதமர் மோடி ரோடு ஷோ
இந்த நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும் விதமாக இன்று பிரதமர் மோடி நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொண்டார். வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பிறகு பிரதமர் மோடி ரோடு ஷோவை தொடங்கினார். அப்போது பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரனை ஒரே பிரசார வாகனத்தில் ஏற்றி மோடி ரோடு ஷோ மேற்கொண்டார்.
இதேபோல் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் பொன் ராதாகிருஷ்ணனும் திறந்தவெளி பிரசார வேனில் நின்றனர். அப்போது அண்ணாமலையை பிரதமர் மோடியே அழைத்து மேலே வருமாறு கூறியது அங்கிருந்த தொண்டர்களையும் உற்சாகப்படுத்தியது. வேப்பமூடு சந்திப்பில் தொடங்கி வடசேரி அண்ணா சிலை வரை 1.5 கிமீ தூரத்திற்கு இந்த ரோடு ஷோவானது நடைபெற்றது.
கீழே இறங்குங்க எடப்பாடி
அப்போது மோடிக்கு சாலையின் இருபுறமும் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பூக்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர். ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிட்டு மலர்களை தூவி வரவேற்பு அளித்தார்கள். பொதுமக்களின் வரவேற்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, கையசைத்தபடியே ரோடு ஷோ சென்றார். ரோடு ஷோ முடிவில் வடசேரி அண்ணா சிலையில் இறங்கிய பிரதமர் மோடி, அண்ணா சிலை, எம்.ஜி.ஆர் சிலை மற்றும் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக ரோடு ஷோ முடிந்து பிரசார வேனில் இருந்து அனைவரும் இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மோடியின் பின்னால் நின்ற அண்ணாமலை, பொன் ராதகிருஷ்ணன் கீழே இறங்கிவிட்டனர். மோடியின் அருகில் நின்றிருந்த எடப்பாடி மற்றும் நயினார் நாகேந்திரன் முன்னால் நின்ற தொண்டர்களை நோக்கி கை அசைத்தப்படி இருந்தனர். அப்போது பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை தொட்டு கீழே இறங்கும்படி கூறினார்.
அடுத்ததாக கோவை வருகிறார் மோடி
போதும் போதும் கீழே இறங்குங்க என்று சொல்லும்படியாக மோடி செய்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கீழே இறங்க.. அவரை தொடர்ந்து மோடியும், நயினார் நாகேந்திரனும் கீழே இறங்கினர். இதையடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்கள் பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர், மீண்டும் கார் மூலம் ஆயுதப்படை மைதானத்துக்கு சென்ற மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து டெல்லி திரும்பினார்.
முன்னதாக மோடியின் குமரி வருகையையொட்டி, திருவனந்தபுரம் விமான நிலையம் முதல் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானம் வரை ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தப்பட்டு இருந்தது. ரோடு ஷோ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து இருந்தனர். நாகர்கோவில் நகரம் முழுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சுமார் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து பிரதமர் மோடி வரும் 18 ஆம் தேதி கோவையில் நடக்கும் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.