அண்ணாத்த’ படப்பிடிப்பில் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டது. சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 14-ம் தேதி ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தான் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் நடன இயக்குநர் பிருந்தா நடன அமைப்பில் பாடலொன்றைப் படமாக்கி வந்தது படக்குழு. வழக்கமாகச் செய்யப்படும் கரோனா பரிசோதனையின் போது 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் ‘அண்ணாத்த’ படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள். ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டு சென்னை திரும்புகிறது படக்குழு. ரஜினிக்குச் செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும், ரஜினி இன்றைக்கே சென்னை திரும்பாமல் 2 நாட்களுக்குப் பிறகே திரும்ப முடிவு செய்துள்ளார்.
படப்பிடிப்பு நடந்திருந்தால் திட்டமிட்டப்படி டிசம்பர் 29-ம் தேதி தான் ரஜினி சென்னைக்குத் திரும்புவதாக இருந்தது. தற்போது ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ரத்தால் அவர் முன்னதாகவே திரும்பவுள்ளார்.
டிசம்பர் 31-ம் தேதி கட்சித் தொடக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ள நிலையில், படப்பிடிப்பில் கரோனா தொற்று பரவல் செய்தி வைரலாக பரவி வருகிறது.
மேலும், கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே படப்பிடிப்பு நடைபெற்று வந்த போதிலும் எப்படி கரோனா தொற்று பரவியது. படக்குழுவினர் யாரேனும் வெளியே சென்றுவிட்டு, மீண்டும் படப்பிடிப்புக்குள் வந்தார்களா என்று படக்குழுவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.