சென்னை; தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில், காலியாக உள்ள, 954 சமையலர் பணியிடங்களை நிரப்ப, அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் காமராஜ், அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டேர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
இத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 1,354 விடுதிகளில், 954 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 919 பணியிடங்களை நேரடியாகவும், 35 பணியிடங்களை, கருணை அடிப்படையிலும் பூர்த்தி செய்ய, அரசு அனுமதி அளித்துள்ளது.
கருணை அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டிய காலியிடங்களை, முதலில் நிரப்ப வேண்டும். காலிப் பணியிட மதிப்பீடு அறிக்கை தயார் செய்து, செப்., 4ல், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி, தகுதியுள்ள பணி நபர்களின் பட்டியலை, செப்., 18க்குள் பெற வேண்டும்.
நடைமுறையில் உள்ள அரசாணைகள், நிர்ணயிக்கப்பட்ட இட ஒதுக்கீடு, சுழற்சி முறை, முன்னுரிமை உடையவர் ஆகியவற்றின் அடிப்படையில், தகுதியுள்ளவர் பட்டியலை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற வேண்டும்.
இவற்றில் தவறு கண்டறியப்பட்டால், அதற்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரே பொறுப்பு.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், முன்னாள் படை வீரர் நல அலுவலகம் வாயிலாக பெறப்பட்ட, பணிக்கு காத்திருப்போர் பட்டியல், பொது விளம்பரம் வழியே பெறப்பட்ட, வேலை கோரிேயார் பட்டியல் ஆகியவற்றை, இன சுழற்சியின்படி ஆய்வு செய்ய வேண்டும்.
ஒருங்கிணைந்த பட்டியலை, செப்., 28க்குள் தயாரித்து, 30க்குள் பட்டியலை, பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குனர் அலுவலகத்திற்கு, அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது