கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை மாணவர்களுக்காக இணையவழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது.
பாடத்திட்டம், தேர்வு முறை உள்ளிட்ட கற்றல் பணிகளிலும் அரசுப் பள்ளி மேம்பாடு, ஸ்மார்ட் வகுப்பறைகள் என கட்டமைப்பு வசதிகளிலும் தமிழக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. பள்ளிக் கல்விக்கெனத் தனி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு, கல்வித் தொலைக்காட்சி என்ற பெயரில் தினந்தோறும் வீடுகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
மலேசியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் பின்பற்றப்பட்ட சிறந்த கல்வித் திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டன. அதேபோல பின்லாந்து கல்வித்துறை உதவியுடன் 8-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது.
இந்நிலையில் தற்போது கரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகள், இணையவழிக் கற்றலை அறிமுகப்படுத்தி நடத்தி வருகின்றன. அதேபோல ஏராளமான தனியார் பள்ளிகளும் ஆன்லைன் வழிக் கற்பித்தலை மேற்கொண்டு வந்தன.
இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறையும் இணையவழிக் கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் வீடியோ மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி என இரண்டு வகைமைகளுக்கும் தனித்தனியாக காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வகுப்புக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட ஒவ்வொரு பாடப் பிரிவில் உள்ள பாடத்துக்கும் வீடியோக்கள் இதில் உள்ளன. கற்றலுக்கெனத் தனியாகவும் செய்து பார்க்கவெனத் தனியாகவும் காணொலிகள் உள்ளன.
இவற்றைப் பதிவிறக்கம் செய்துவைத்து. இணையம் இல்லாமலும் காண முடியும்.
கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (எமிஸ்) சார்பில், இந்த இணைய வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்கான இணைய முகவரி: https://e-learn.tnschools.gov.in/e-learning