கொரோனாவை தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 18ம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கில் தான் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் மட்டுமல்லாமல், உலக பொருளாதாரமே கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதனால் உலகம் முழுதும் கோடிக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே ஏராளமானோர் வேலையிழந்து தவித்துவருகின்றனர். ஊரடங்கால் வருவாய் ஈட்ட முடியாததால், உற்பத்தி சார்ந்த தொழில்துறைகள் உட்பட பல்வேறு தொழில்துறைகளில் பணிபுரிவோரும் வேலையிழந்துவருகின்றனர்.
நிறைய நிறுவனங்கள் பணியாளர்களை வேலையிலிருந்து வெளியே அனுப்பும் நிலையில், அமேசான் நிறுவனம் இந்தியாவில் 50 ஆயிரம் புதிய தற்காலிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியிருப்பதால், வெளியே சென்று பொருட்களை வாங்க முடியவில்லை. இப்போது ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டாலும் கூட, பலர் தங்களது உடல்நலனை கருத்தில்கொண்டு வெளியே செல்ல விரும்பவில்லை.
இந்தியாவில் ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகத்திற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருந்துவரும் நிலையில், ஊரடங்கு நேரத்தில், ஆன்லைன் வர்த்தகத்திற்கான தேவையும் வியாபாரமும் அதிகரித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் டெலிவரி உள்ளிட்ட பல பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேரை தேர்வு செய்து தற்காலிக வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
எனவே ஊரடங்கு நேரத்தில் வேலையிழந்து தவிப்போரும், வேலை வேண்டும் என நினைப்போரும், இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். அமேசான் நிறுவனம் வழங்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலை பெற விரும்புவோர், 1800-208-9900 என்ற எண்ணிற்கு கால் செய்யலாம் அல்லது seasonalhiringindia@amazon.com என்ற ஈ மெயிலில் விண்ணப்பிக்கலாம்.