சென்னை: கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் சீனா மீது உலக நாடுகள் பலவும் அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளன. இதனால் சீனாவில் இருந்து நிறுவனங்கள் வெளியேறினால் அது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என எதிர் பார்க்கப் பட்டது. முதல் கட்டமாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் மொபைல் உற்பத்தியை அதிகரிக்க ஆயத்தம் ஆவதாக சில மாதங்கள் முன்பு தகவல் வெளியானது. இந்நிலையில், ஆப்பிள் ஐபோன்களை அசம்பிள் செய்யும் தைவானை சேர்ந்த பாக்ஸ் கான் நிறுவனம், தமிழகத்தில் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது ஆலையை விரிவுபடுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் கூறுகையில், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாகவே பாக்ஸ் கான் நிறுவனம் சீனாவில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளது என்றனர். ஆனால் பாக்ஸ் கான் மற்றும் ஆப்பிள் நிறுவன தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. எனினும், பாக்ஸ் கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர் ஆலையை விரிவாக்கம் செய்ய வரும் 3 ஆண்டுகளில் 100 கோடி டாலர் (சுமார் ரூ.7500 கோடி) முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் சுமார் 6000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கப் போவதாக பாக்ஸ்கான் நிறுவன தலைவர் கடந்த மாதம் கூறினார். இதைத் தொடர்ந்து மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளனர் ஆப்பிள் நிறுவனம் விஸ்ட்ரான் கார்ப்பொரேஷன் என்ற நிறுவனம் மூலம் பெங்களுருவில் சில மாடல் போன்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனமும் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க கூடுதலாக ஓர் ஆலையை அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது