சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் தொடங்க முன்வந்துள்ள 14 நிறுவனங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார். கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வருகின்றன. இந்த தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் அரசு சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.
இவர்கள் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து, அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் பல்வேறு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கும் வகையில் புதிய தொழில் கொள்கையும் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 14 நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளது. இந்த நிறுவனங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று ரூ.10,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட், அப்போலோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி, ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனம், டி.பி.ஐ. கார்போன் நிறுவனம், மந்த்ரா டேட்டா சென்டர் உட்பட 14 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இதில் பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்கப்படுகிறது. ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஓசூரிலும், அப்போலோ டயர்ஸ் ஓரகடத்திலும் அமைய உள்ளது. மற்ற நிறுவனங்கள் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைய உள்ளன. இந்த 14 நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்க உள்ளது. இதன் மூலம் 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரலிலிருந்து 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அரசுடன் கையெழுத்தான நிலையில் மேலும் 14 ஒப்பந்தம் கையெழுத்தானது.
Website link: www.tnprivatejobs.tn.gov.in