சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆண், பெண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகளை தொழில்முனைவோர் ஆக்கும் வகையில் புதிய தொழில்முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்) என்ற சிறப்பு கடனுதவி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் பட்டப் படிப்பு, பட்டய படிப்பு (டிப்ளமா), ஐடிஐ முடித்தவர்கள் கடன் பெறலாம். இந்த கடனைப் பெற குறைந்தபட்சம் கடந்த 3 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருப்பதும் அவசியம்.
இந்த கடன் திட்டத்தின்கீழ், உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ.10 லட்சமும் அதிகபட்சம் ரூ.5 கோடியும் கடனுதவி பெறலாம்.
கடன் தொகையில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தின் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்கள் அறிய அந்த அலுவலகத்தை நேரிலோ அல்லது 9597373548 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.