ஜனவரி 1 முதல் பாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் பிப்ரவரி 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக வைத்துள்ள அனைத்து வாகனங்களுக்கும், இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
இந்த சலுகையை பயன்படுத்தி கொள்வதற்கு, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் இருந்து பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக்கை (Zero Transaction FASTag) மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனங்களுக்கு பெற்று கொள்ள வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக வைத்துள்ள அனைத்து வாகனங்களுக்கும், டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதற்கான நடவடிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் இத்தகைய வாகனங்கள் ‘Invalid Carriage’ என வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக வைத்துள்ள அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் எப்படி உபயோகிப்பது என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கலாம்டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களில் பயன்படுத்துவதற்காக பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் என்ற ஏற்பாட்டை அரசு செய்துள்ளது.
அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், தலைமை செயலாளர்கள், மத்திய அரசின் செயலாளர்கள் போன்றோரின் வாகனங்களில் பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் பயன்படுத்தப்படுகிறது.