மத்திய அரசின் ஸ்வநிதித் திட்டத்தின் கீழ் ரூ.10,000 கடனுதவிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்…
’பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா’ எனப்படும் பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்கான திட்டம் ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இத்திட்டம் கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதாகும். இத்திட்டத்தின் கீழ் வியாபாரிகள் ரூ.10,000 வரை கடன் பெற முடியும்.
இத்திட்டத்தின் கீழ் ரூ.10,000 கடனுதவி பெறுவதற்கு ஆன்லைன் மூலமாகவும் மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். கூகுள் பிளே ஸ்டேரில் PMSVANidhi மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். அந்த மொபைல் செயலியில் apply for loan என்ற வசதியில் சென்று உங்களது மொபைல் எண் கொடுத்து உள்நுழைய வேண்டும். மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணைப் பதிவிட்டு சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறந்த தேதி, தந்தை பெயர், முகவரி, அடையாள ஆவணம், வருவாய் ஸ்டாம்ப் 2 போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும்.
ஆவணத்தைப் பூர்த்தி செய்த பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு தகவல் வரும். விண்ணப்பித்து முடித்த பிறகு கடன் தொகை மூன்று தவணைகளாக உங்களது வங்கிக் கணக்குக்கு வந்து சேரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணம் வரும். இக்கடன் 7 சதவீத வட்டியில் உங்களுக்குக் கிடைக்கும். https://pmsvanidhi.mohua.gov.in/ என்ற இணையதளத்தில் சென்றும் நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்களாகவே விண்ணப்பிக்க முடியாவிட்டால் கணினி மையத்துக்குச் சென்றும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.