சென்னை: அரசு பஸ்ஸில் பயணம் மேற்கொள்கிறீர்களா? இலவச பயணச்சீட்டை ஆன்லைனில் பெற முடியுமா? அதை எப்படி பெற வேண்டும் தெரியுமா?
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது.
மேலும், அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையையும் அளித்து வருகிறது.
பயணச்சலுகை: அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், “மகளிர் கட்டணமில்லா பயணம்” திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பஸ்கள் கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அதுமட்டுமல்ல, மலைப்பகுதிகளிலும், கட்டணமில்லா பஸ்கள் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.இப்படிப்பட்ட சூழலில், பயணிகளின் வசதிகளை கருத்தில்கொண்டு, இன்னொரு வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி,
இ-சேவை மூலம் கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்க முடிவு செய்துள்ளதாம்.
பயணச்சீட்டு: அதாவது, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர்களுக்கு இலவச பயணசீட்டு, அலுவலகம் செல்வோருக்கான கட்டண சலுகை அனுமதி சீட்டு, மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் பயணம் மேற்கொள்ள கட்டணமில்லா பயண அட்டைகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
வெப்சைட்: ஆனால், இதனை ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கவும், புதிய பேருந்து பாஸ்களை பெறவும், நீண்ட வரிசையில் பேருந்து பணிமனைகள் அல்லது பேருந்து நிலையங்களிலோ காத்திருந்து பெறவேண்டிய கடினமான நிலைமை உள்ளது. இப்படி ஒரு அவதியை தடுப்பதற்காகத்தான், இந்த கட்டணமில்லா மற்றும் சலுகை பயணசீட்டுகளை வெப்சைட் மூலமே இனி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினை, பல்லவன் போக்குவரத்து அறிவுரைப்பணிக்குழு மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து தொடங்க்பபட்டுள்ளது.. கடந்த மாதம்தான் இதற்கான தொடக்க நிகழ்ச்சியும் நடந்தது.. முதற்கட்டமாக மாநகர போக்குவரத்து கழகத்தில் இந்த வசதியானது செயல்படுத்தப்பட்டுள்ளது.. இனி, கட்டணமில்லா பயணசீட்டுகளை பெற விரும்பும் தகுதியுடையோர் அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது tn.e.sevai இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.
வழிமுறைகள்: இலவச பயணச்சீட்டு பெற விரும்பும் தகுதியுடையவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம். அல்லது இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். இதற்காகவே இணையதளம் ஒன்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் அந்த வழிமுறைகள்:
– https://mtcbus.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் நுழைய வேண்டும்
– CONCESSION FARES-என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
– மாணவர்கள், பத்திரிகையாளர்கள், மாற்று திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழரறிஞர்கள், வயது முதிர்ந்தவர்கள் என – தனித்தனி விண்ணப்பங்கள் தரப்பட்டிருக்கும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் தேவையான விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்
– தங்கள் விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை மறுபடியும் அதே வெப்சைட்டில் அப்லோடு செய்ய வேண்டும். இதற்கு தரப்படும் ரசீனை பெற்று கொண்டு, பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும்
– பிறகு, பயனாளியின் செல்போனுக்கு மெசேஜ் வந்துவிடும். இந்த பயணச்சீட்டு அட்டையை டவுன்லோடு செய்து இலவச பயணத்தை பயணிகள் மேற்கொள்ளலாம்