சென்னை: தமிழக கிராமங்களில் உள்ள இளைஞர்களின் தொழில் ஐடியாவை, புத்தொழில் நிறுவனமாக உருவாக்க, ‘கிராமந்தோறும் புத்தொழில்’ திட்டத்தை செயல்படுத்தும் பணியில், தமிழக அரசின் ஸ்டார்ட் டி.என்., நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுதும் உள்ள படித்த இளைஞர்கள், ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனங்களை துவக்கி வருகின்றனர்.
சிரமம்
தமிழகத்தில் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் செய்கிறது. கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களிடம், தொழில் துவங்குவது தொடர்பான ஐடியா எனப்படும் கருத்துருக்கள் உள்ளன. இருப்பினும், ஏழ்மை நிலை, நிதியுதவி கிடைக்காதது போன்றவற்றால் தொழில் துவங்க சிரமப்படுகின்றனர்.
எனவே, கிராமந்தோறும் இளைஞர்களை சந்தித்து, சிறந்த தொழில் ஐடியா வைத்திருப்பவர்களை கண்டறிந்து, ஸ்டார்ட் அப் நிறுவனம் துவக்குவதை ஊக்குவிக்க, ‘கிராமந்தோறும் புத்தொழில்’ திட்டத்தை, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் முதல் கட்டமாக, 100 கிராமங்களில் விரைவில் செயல்படுத்தப்படும்.
இது குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகரங்களை தாண்டி, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக, சென்னை, மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி ஓசூர், சேலம், கடலுார், தஞ்சை மற்றும் திருச்சியில் வட்டார புத்தொழில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
புத்தொழில்
இவற்றில் உள்ள அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று, புத்தொழில் துவங்குவதை ஊக்குவிப்பர். முதல் கட்டமாக, 100 கிராமங்களை தேர்வு செய்து, அங்குள்ள இளைஞர்களிடம் தொழில் ஐடியாக்களை கேட்டு, சிறந்த ஐடியாவை, புத்தொழிலாக துவக்க உதவிகள் செய்யப்படும்.
தற்போது, கிராமங்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. விரைவில் கிராமந்தோறும் திட்டத்தில் தேர்வாகும் நபருக்கு, ஆரம்பத்தில் தலா, 1 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி செய்யப்படும்.
பின், தமிழக புத்தொழில் ஆதார நிதி திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பெண்களுக்கு, 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். இத்திட்டத்தால் உள்ளூர் பொருளாதாரம் வளர்வதுடன், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்
