TNPSC group 4 VAO exam jos qualification age syllabus full details here: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு; தேர்வு தேதி, பாடத்திட்டம் மற்றும் தேர்வர்களுக்கான முக்கிய தகவல்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 மற்றும் விஏஓ O அறிவிப்பு இந்த (அக்டோபர்) மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இந்த தேர்வுக்கு தயாராகுபவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகளை இப்போதுப் பார்ப்போம்.
தமிழக இளைஞர்கள் பெரும்பாலானோரின் கனவு அரசு வேலை. அந்த கனவை எளிதாக நனவாக்கும் சிறந்த வழி தான் குரூப் 4 தேர்வு. பத்தாம் வகுப்பு படித்தவர்கள் அனைவருமே இந்த தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள் தான். மேலும் ஒரே ஒரு எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் உடனடி வேலை. மேலும் குருப் 4 தேர்வுகளில் உள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் உங்கள் சொந்த மாவட்டத்திற்குள்ளாகவே வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. TNPSC யானது, குரூப் 4, விஏஓ முதல் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துவதோடு, பிற அரசுத்துறை பணியிடங்களுக்கும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதற்காக TNPSC ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில் நடைபெற உள்ள தேர்வுகளின் பட்டியலை வருடாந்திர அட்டவணையாக வழக்கமாக வெளியிடும். ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் அட்டவணையில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில், விரைந்து தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக உதவி அரசு வழக்கறிஞர், ஜியாலஜிஸ்ட், ஐடிஐ முதல்வர் மற்றும் நகர திட்டமிடல் பொறியியலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இதனால், பல மாதங்களுக்கு பின்னர் TNPSC இந்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளதால் குரூப் 2 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அடுத்தடுத்து புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான அறிவிப்பு, TNPSC வருடாந்திர அட்டவணைப்படி செப்டம்பர் மாதம் வெளியாக வேண்டும். ஆனால் செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகததால், தற்போது அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், தேர்வு ஜனவரியில் நடத்தப்படலாம் என தெரிகிறது. மேலும் தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படலாம என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே இந்த தேர்வு குறித்து தேர்வர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இப்போது பார்ப்போம்.
குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் பதவிகள்
TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)
குரூப் 4 தேர்வுக்கான கல்வித் தகுதி
குரூப் 4 தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி என்பது தான் அடிப்படை கல்வித் தகுதி. இருப்பினும் சில பதவிகளுக்கு கூடுதல் தகுதிகளை தேர்வர்கள் பெற்றிருக்க வேண்டும்.
அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது.
ஆனால், தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதேபோல் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். எனவே அவர்களுக்கு கூடுதலான வாய்ப்பு உள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான வயது வரம்பு
குரூப் 4 தேர்வுக்கான வயதுத் தகுதி பொதுவாக 18 முதல் 30 வரை ஆகும். இருப்பினும் சில பதவிகளுக்கு வயது வரம்பு தகுதியில் மாற்றம் உண்டு.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு.
அதுவே இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு.
மேலும் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் அனைத்து பதவிகளுக்கும் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அதாவது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை
குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.
பாடத்திட்டம்
முதல் பகுதியான மொழிப்பாடப்பிரிவில் இதுவரை, தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் 100 வினாக்கள் இடம்பெறும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது தமிழக அரசு, தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த பாடத்திட்ட முறையில் மாற்றம் வந்தாலும் வரலாம்.
அடுத்ததாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75- பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும்.
பொது அறிவு பகுதியில் கீழ்கண்ட தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
அறிவியல் : இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்
நடப்பு நிகழ்வுகள் : வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல் மற்றும் சில.
புவியியல் : புவி மற்றும் பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள் மற்றும் சில.
வரலாறு : சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள்
தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு மற்றும் சில.
இந்திய அரசியல் : அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் சில.
பொருளாதாரம் : ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளான் மற்றும் வணிக வளர்ச்சி மற்றும் சில.
இந்திய தேசிய இயக்கம் : தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பல தலைவர்களின் பங்கு மற்றும் சில.
திறனறி வினாக்கள் : தர்க்க அறிவு (Reasoning) மற்றும் கணிதத்தைக் கொண்டது. இதில் சுருக்குதல் (Simplification), எண்ணியல் (Number System), கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர் (Arithmetic Progression and Geometric Progression), சராசரி (Average), சதவீதம் (Percentage), விகிதம் மற்றும் விகித சமம் (Ratio and Proportion), மீ.பெ.வ (Highest Common Factor), மீ.சி.ம (Least Common Multiple), தனிவட்டி (Simple Interest), கூட்டுவட்டி (Compound Interest), அளவியல் பாடங்களில் பரப்பளவு (Area) மற்றும் கன அளவு (Volume), வேலை மற்றும் நேரம் (Time and Work), வேலை மற்றும் தூரம் (Time and Distance), வயது கணக்குகள் (Ages), இலாபம் மற்றும் நட்டம் (Profit and Loss), வடிவியல் (Geometry), இயற்கணிதம் (Algebra) போன்ற தலைப்புகளிலிருந்து வினாக்கள் வரும்.
எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.
கட் -ஆஃப்
குரூப் 4 தேர்வை பொறுத்தவரை மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சிதான். ஆனால் போட்டித் தேர்வுகளை பொறுத்தவரை தேர்ச்சி மதிப்பெண் என்பது ஒரு அளவுகோல் மட்டுமே. அக்குறைந்தப்பட்ச மதிப்பெண்களை பெற்றால்தான் நீங்கள் அடுத்தக்கட்ட தேர்வுக்கு (சான்றிதழ் சரிபார்ப்பு) தகுதியானவர்கள். ஆனால் உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்றால், நீங்கள் காலியிடங்களின் எண்ணிக்கைக்குள் வரும் அளவிற்கு மதிப்பெண்கள் பெற வேண்டும்.
கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை நாம் எதையும் அறுதியிட்டு சொல்ல முடியாதது எனினும் கடந்த ஆண்டுகளில், வேலை கிடைத்தவர்களின் மதிப்பெண்களோடு ஒப்பிட்டு, கட்-ஆஃப் மதிப்பெண்களைக் கணக்கிடலாம். அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் பொதுப் பிரிவில் 164 வினாக்கள் சரியாக எழுதியவர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் BC பிரிவில் 162, MBC பிரிவில் 162, BCM பிரிவில் 154, SC பிரிவில் 160, SCA பிரிவில் 155, ST பிரிவில் 156 வினாக்களுக்கு சரியாக விடை எழுதியவர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது நீங்கள் 165 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிப்பது உங்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்யலாம். இந்த கட்-ஆஃப் மதிப்பெண் எண்கள் மாறுதலுக்கு உட்பட்டது. மற்றும் இன ரீதியான பிரிவு வாரியாக கட் –ஆஃப் மதிப்பெண் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாலும், குரூப் 4 தேர்வுக்கான போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாலும், இதுவரை தேர்வுக்கு தயாராகாதவர்கள் விரைவில், தேர்வுக்காக தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.