புது தில்லி: இந்திய நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்துறையினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 6 சலுகைகளை அறிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது,
சிறு, குறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு நிறுவனங்கள் அக்டோபர் 31ம் தேதி வரை கடன் உதவி பெறலாம்.
இந்த 3 லட்சம் கோடி கடனுதவி திட்டத்தின் மூலம் சுமார் 45 லட்சம் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் பலனடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்களை நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், “பொது முடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள் பாதித்திருப்பதை அரசு உணர்ந்துள்ளது. இந்தியா சுயபலத்துடன் செயல்படும் நோக்கத்திலேயே பிரதமர் சுயசார்பு உற்பத்தியை வலியுறுத்தியுள்ளார். நேரடி மானியத் திட்டம் மக்களுக்கு மிகவும் உதவிகரமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிசான் திட்டம் மூலம் நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்தப்பட்டது ஊரடங்கு காலத்தில் மிகவும் உதவியது. மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி மற்றும் மின் உற்பத்தித்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றிருக்கிறது.
தற்சார்பு இந்தியா என்றால் உலகத்திடமிருது துண்டித்துக் கொள்வது அல்ல, தன்னம்பிக்கையை அதிகரிப்பது. பிரதமர் அறிவித்த திட்டத்தின் விவரங்களை அடுத்த சில நாட்கள் தொடர்ச்சியாக அறிவிப்போம். முதற்கட்டமாக இன்று 15 அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. சிறு, குறு, தொழில்துறைக்கு இன்று 6 சலுகை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில் துறைக்கு கடன் வழங்க ரூ.20,000 கோடி நிதி.
அறிவிப்புகளின் விவரங்கள்:
சிறு, குறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் அக்டோபர் 31 ஆம் தேதி வரை கடன் பெறலாம். இதன்மூலம் 45 லட்சம் சிறு, குறு தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
இந்த கடனை ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம். முதல் ஓராண்டுக்கு கடன் தவணை வசூலிக்கப்படாது. ரூ100 கோடி வியாபாரம் உள்ள சிறு தொழில்களுக்கு ரூ.25 கோடி கடன் இருந்தால் கூடுதல் கடன் தரப்படும்.
கடன் வசதியை பெற சொத்து பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் எதையும் தரத் தேவையில்லை.
வாராக்கடன் பட்டியலிலுள்ள நிறுவனங்களுக்கு புதிய கடன் கிடைக்க அரசே உத்தரவாதம் தரும்
சிறு குறு தொழில்துறை நிறுவனங்களுக்கு வரையறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.வாரா கடனிலுள்ள நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை கடன். குறுந்தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு 25 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி ரூபாயாக உயர்வு
நலிவடைந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20ஆயிரம் கோடி கடனுதவி. நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரம்பு 10 கோடியிலிருந்து 20 கோடியாக அதிகரிப்பு
ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது. அனைத்தும் இந்திய நிறுவனங்களுக்கே கொடுக்கப்படும்.
முதலீட்டு வரம்பு உயர்வால் அதிக முதலீடு செய்து தொழில் நடத்துவது ஊக்குவிக்கப்படும். சர்வதேச டெண்டர் கட்டுப்பாட்டால் உள்நாட்டு சிறுதொழில் நிறுவனங்கள் பயன்பெறும்” என தெரிவித்தார்.