தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு, புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் குரூப்-1 தேர்வில் இருந்து அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பட்டு அதிகாரி சுதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” விடுதல்களில் விடைகளை குறிக்க கருப்பு நிறத்திலான பால் பாயிண்ட் பேனா பயன்படுத்தப்பட வேண்டும்.
கையெழுத்திட வேண்டிய இடங்களில் கையெழுத்திட்டு, இடதுகை பெருவிரல் ரேகையினை பதிக்க வேண்டும்.
விடைகள் தெரியாத பட்சத்தில், விடைத்தாளில் ஐந்தாவது குறிப்பை கருமை நிறத்தால் குறிக்க வேண்டும். ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்பது குறித்த மொத்த எண்ணிக்கை உரிய கட்டங்களில் நிரப்ப வேண்டும்.
மேற்கூறியுள்ள எண்ணிக்கைகளை சரிவர குறிக்க தவறும் பட்சத்தில் ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும். இதனை செய்ய நேரம் ஆகும் என்பதால், தேர்வு முடிந்ததும் 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் குரூப்-1 தேர்வு முதல் இந்த நடைமுறை அறிமுகமாகும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.