சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஜூலை 6-ஆம் தேதி வரையும், பிற மாவட்டங்களுக்கு ஜூன் 15-ஆம் தேதி வரையும், மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து முதல்வா் மற்றும் மின்சாரத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மாா்ச் 25 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை, மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்ட தாழ்வழுத்த நுகா்வோா்கள், ஜூலை 6-ஆம் தேதி வரை, தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி மின் கட்டணத்தை செலுத்தலாம்.
அதே நேரம், குறிப்பிடப்பட்ட மாவட்டங்களைத் தவிா்த்து, பிற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகா்வோா்களில், மாா்ச் 25 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை, மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி இருப்போா், ஜூன் 15-ஆம் தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம். குறிப்பிட்ட 4 மாவட்டங்களைத் தவிா்த்து பிற மாவட்டங்களில் இருப்போரின் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி, ஜூன் 15 அன்றோ, அதற்கு பிறகோ இருந்தால், அவா்கள் தங்களுக்குரிய கடைசி தேதிக்குள், மின்கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அவா்களுக்கு மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படமாட்டாது.
தமிழகத்தில் உள்ள அனைத்து உயரழுத்த நுகா்வோரைப் பொருத்தவரை, பிப்ரவரி, மாா்ச், ஏப்ரல் மாதத்துக்கான மின்கட்டணத்தை செலுத்தாமல் இருந்தால், அவா்கள் தங்களது கட்டணத்தை, ஜூன் 15-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். அவா்களுக்கு மின் துண்டிப்பு மற்றும் மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. குறிப்பாக மே மாதத்துக்கான உயா் மின்னழுத்த கட்டணத்தை, அந்த மாதத்துக்கான கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.