இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் தினமும் பல ஆயிரம் பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் SBI வங்கி புதிய கடன் திட்டமான ‘எஸ்பிஐ கவச்’ தனிநபர் கடனை அறிமுகம் செய்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி பொதுத்துறை வங்கிகளுக்குக் கொரோனா சிகிச்சைக்காகக் கடன் வழங்க அனுமதி அளித்தது. இதன் வாயிலாகத் தற்போது எஸ்பி கவச் என்னும் தனிநபர் கடனை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
எஸ்பிஐ கவச்
கொரோனா நோயாளிகளுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த எஸ்பிஐ கவச். கொலேட்ரல் இல்லாமல் கடன் அளிக்கப்படும் காரணத்தால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
மேலும் ஏற்கனவே கொரோனா தொற்று மூலம் சிகிச்சை பெற்றதற்கான செலவுகளை இந்த எஸ்பிஐ கவச் திட்டத்தின் மூலம் ஈடு செய்ய முடியும்.
யாரெல்லாம் இந்தத் திட்டம் மூலம் கடன் பெற முடியும்
இந்தத் திட்டம் மாத சம்பளக்காரர்களுக்கும், பென்ஷன் பெறும் நபருடன் இணைந்து சம்பளக்காரர்கள் அல்லாதவர்களுக்கும் இத்திட்டம் மூலம் கடன் அளிக்கப்படும். மேலும் ஏப்ரல் 1, 2021-க்குப் பின் கொரோனா பாதிப்பு எதிர்கொண்டவர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்
எஸ்பிஐ கவச் திட்டத்தின் மூலம் கடன் பெற விரும்புவோர் கொரோனா பாசிடிவ் அறிக்கையைக் கட்டாயம் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இதனை அடிப்படையாக வைத்து கடன் அளிப்பதற்கான பணிகள் துவங்கப்படும்.
கடன் தொகை
இத்திட்டத்தின் கீழ் 25000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் 60 மாத கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் கடன் பெறுவோர் கொரோனா சிகிச்சை மிகவும் சிறப்பான வகையில் பெற முடியும்.
வட்டி விகிதம்
எஸ்பிஐ கவச் திட்டத்தின் மூலம் 25000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் பெறப்படும் கடனுக்கு 8.5 சதவீத வட்டியில் நிதியுதவி செய்கிறது எஸ்பிஐ. மேலும் இந்தக் கடனுக்கு 3 மாதம் ஈஎம்ஐ செலுத்துவதற்கான சலுகை அளிக்கப்படுகிறது.
செயலாக்க கட்டணம் இல்லை
இந்தக் கடனை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கி கிளைகள் அல்லது யூனோ செயலியின் வாயிலாக முன் ஒப்புதல் பெற்று கடன் பெறலாம். மேலும் இந்தக் கடனுக்குச் செயலாக்க கட்டணம் இல்லை என்பது கூடுதல் சிறப்பு.