இந்தியாவில் குறைந்த விலையில் விமானப் பயணங்களைச் சாத்தியமாக்கிய ஏர் டெக்கானின் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கைக் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம், சூரரைப் போற்று.
ஒரு விமானம் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் இறங்குவதற்கு அனுமதி கேட்கிறது. அனுமதி மறுக்கப்படவே, அருகில் உள்ள தாம்பரம் விமானப்படை விமான தளத்தில் எச்சரிக்கையை மீறி இறக்கப்படுகிறது. ராணவ வீரர்கள் விமானத்தைச் சுற்றி வளைக்கிறார்கள். இப்படி ஒரு விறுவிறுப்பான காட்சியோடு துவங்குகிறது சூரரைப் போற்று.
மதுரை சோழவந்தானைச் சேர்ந்த நெடுமாறனுக்கு (சூர்யா) குறைந்த விலையில் எல்லோரும் பயணம் செய்யும்வகையில் ஒரு விமான நிறுவனத்தைத் துவங்க வேண்டுமென ஆசை. ஆனால், அந்தக் கனவு எளிதில் கைகூடுவதாயில்லை. ஏற்கனவே அந்தத் தொழிலில் இருப்பவர்களும் அதிகாரவர்க்கமும் சேர்ந்துகொண்டு முட்டுக்கட்டை போடுகிறார்கள். நெடுமாறனின் திட்டங்களைச் சீர்குலைக்கிறார்கள். இதை மீறி, நெடுமாறனால் தன் விமான நிறுவனத்தை செயல்பட வைக்க முடிந்ததா என்பதுதான் கதை.
ஏர் டெக்கான் நிறுவனத்தைத் துவங்கிய கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் தான் நினைத்ததைத் திட்டமிட்டு, உடனடியாக முடித்தேயாகவேண்டுமென்ற தீவிரம் கொண்டவர். சைனிக் பள்ளியில் சேர்ந்து, தேசிய ராணுவ அகாடெமியில் படித்து, போரில் பங்கேற்று, விவசாயம் செய்து, தேர்தலில் போட்டியிட்டு, ஹெலிகாப்டர் வாடகைக்குவிடும் நிறுவனத்தைத் துவங்கி, பிறகு குறைந்த கட்டண விமான நிறுவனத்தைத் துவங்கியவர்.
கோபிநாத்தின் இவ்வளவு நீண்ட சாகசத்தில் ஒரு குறிப்பிட்ட அத்தியாத்தை மட்டும் எடுத்து திரைக்கதையாக்கியிருக்கின்றனர் சுதா கொங்கராவும் அவரது குழுவினரும். இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு. இதனால் படத்தின் இலக்கு தெளிவாகிவிடுவதால், அந்த இலக்கை நோக்கி கதாநாயகனோடு சேர்ந்து நாமும் பரபரப்பாக பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது.
படத்தில் பல இடங்களில் கண்ணீர் சிந்தவைக்கும், உணர்ச்சிவசமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கோபிநாத் ஒரு விமான நிறுவனத்தை துவங்குவதற்கு முன்பு எதிர்கொண்ட பிரச்சனைகள், சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தச் சின்னச் சின்ன பிரச்சனைகளை விட்டுவிட்டால், ஒரு ரசிக்கத்தக்க படம் இது.
கோபிநாத்தின் சுயசரிதையைப் படித்திருந்தால், படத்தில் வரும் பாத்திரங்களை எளிதில் அடையாளம் காணலாம். அப்படிப் படித்திருக்காவிட்டாலும் பாதமில்லை. குறுந்தாடி வைத்துக்கொண்டு கையில் மதுக் கோப்பையோடு, விமான நிறுவனம் நடத்திய பாலைய்யா யார் என்று படம் பார்ப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள்.
இந்தப் படத்தில் நடிகர்கள் தேர்வும் கச்சிதம். சூர்யாவில் துவங்கி வில்லனாக வரும் பரேஷ் வரை எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் உறுத்தாத வகையில் இடம்பெற்றிருக்கின்றன.
கேப்டன் கோபிநாத்தின் சுயசரிதையான Simply Fly – A Deccon odyssey மிக விறுவிறுப்பான புத்தகம். ஒரு சுயசரிதை என்னதான் சுவாரஸ்யமாக இருந்தாலும் சரி, அதை சினிமாவாக மாற்றும்போது சுவாரஸ்யமாக இருக்குமென உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஆனால், சுதா கொங்கரா அதை இந்தப் படத்தில் செய்திருக்கிறார்.