Social Activity

தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளை தொடங்கலாம்

தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளை தொடங்கலாம்

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள கற்றல், கற்பித்தல் பிரச்சினைகள் குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வி ஆணையர் சி.ஜி.தாமஸ் வைத்யன் தலைமையில் 12 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவுக்கு தனியார் பள்ளிகளை சார்ந்த சங்கங்கள் தங்களுடைய பரிந்துரைகளை அனுப்பி இருக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் உயர்நிலை பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் பள்ளிக்கல்வி ஆணையருக்கு அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறந்து கற்றல், கற்பித்தல் பணிகளை தொடர அனுமதிக்கவேண்டும். நோய்த்தொற்று குறையாமல் இருந்தால், எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை ஒருநாளும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒருநாளும் நடத்த அனுமதிக்கவேண்டும். ஒருநாள் இடைவெளி இந்த 2 தொகுதி மாணவர்களுக்கும் கிடைக்கும், அந்த நாட்களில் வீட்டு பாடங்களும், ஆன்லைனில் வகுப்புகளும் நடத்தலாம்.

* ஒரு வகுப்பறையில் 10 முதல் 15 மாணவர்களை அமரவைத்து, கிருமிநாசினி திரவம் கொண்டு கை, கால்களை கழுவச்சொல்லலாம். முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து வர மாணவர்களை அறிவுறுத்தலாம். மேலும் ஒரு வகுப்பில் படிக்கும் மொத்த மாணவர்களை சரிபாதியாக பிரித்து காலை ஒரு பிரிவினருக்கும், மதியம் மற்றொரு பிரிவினருக்கும் வகுப்பு வாரியாக பாடங்கள் நடத்தலாம்.

* அதிகம் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஒருமாதம் தள்ளிக்கூட பள்ளிகள் திறக்க அனுமதிக்கலாம். மாவட்ட கலெக்டரின் தலைமையில் அந்தந்த மாவட்ட சூழ்நிலைக்கு ஏற்ப, மாநிலத்தில் உள்ள நிலைமையையும் கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தலில் பாதிக்காத வகையில் முடிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.ராஜா, பொதுச்செயலாளர் டி.சி.இளங்கோவன் ஆகியோர் பள்ளிக்கல்வி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

* பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மொழி மற்றும் பிற பாடங்களில் 20 சதவீதம் பாடசுமையை குறைக்க வேண்டுகிறோம். தற்போதுள்ள சூழ்நிலையில் தனியார் பள்ளிகள் பல்வேறு நிர்வாக சிக்கல்களை சந்தித்துவரும் நிலையில், தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தி வழங்க கட்டண நிர்ணயக்குழுவுக்கு பரிந்துரை செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

* ஜூலை முதல்வாரம் பள்ளிகள் இயங்கவும் பள்ளிகள் பின்பற்றவேண்டிய உரிய நடைமுறைகளை வழங்க ஆவண செய்யவேண்டும். மாணவர்கள் பள்ளிகளுக்கு சிரமமின்றி வந்து செல்லும் வகையில் ஒருநாள்விட்டு ஒருநாள் வரும் வகையில் நடவடிக்கை எடுக்கலாம். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகம் வழங்கப்படுவது போல, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top