IIT MADRAS RECRUITMENT 2021
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளையும் குடும்பங்களையும் தொடர் கண்காணிப்பு செய்யும் பொறுப்பினை ஏற்கெனவே உள்ள கிராம மற்றும் வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு செய்து, அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும்போது வழங்கப்படும் என்றும், அக்குழந்தைகளின் பட்டப் படிப்பு வரையிலான கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், கரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும். மாவட்டந்தோறும் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித்தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சி ஆகியவை கண்காணிக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் மாநில அமைப்பாளர், பேராசிரியர் ஆண்ரு சேசுராஜ் இன்று வெளியிட்ட அறிக்கை:
”கோவிட் பெருந்தொற்றுக்குப் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கு தமிழ்நாடு அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அறிவிப்புகளை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வணங்கி வரவேற்கிறது,
பெற்றோரை இழந்த குழந்தைகளைக் குடும்பச் சூழலிலேயே பராமரிக்க அவர்களுக்கு 18 வயது முடியும் வரை மாதம் ரூ.3000 உதவித்தொகை அறிவித்து இருப்பது நல்லதொரு அறிவிப்பு. இதனால் குழந்தைகள் அவசியமில்லாமல் விடுதிகளில் சேர்க்கப்படுவதைத் தடுப்பதோடு அவர்கள் தங்களின் குடும்பப் பண்பாட்டுச் சூழலில் தொடர்ந்து வளர வழிவகுக்கும். இதையே ஐ.நா. குழந்தை உரிமைகள் மீதான உடன்படிக்கையும், இளைஞர் நீதிச் சட்டம் 2015ம் வலியுறுத்துகிறது.
இந்த திட்டத்தினைச் செயல்படுத்த மாவட்டப் பணிக்குழுக்களை உருவாக்கும் அறிவிப்பையும் வரவேற்கிறோம். அந்தக் குழுவில் மாவட்டக் குழந்தை நலக் குழும உறுப்பினர், சைல்டுலைன், குழந்தைகளுக்குப் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்படும் குழந்தைகளையும் குடும்பங்களையும் தொடர் கண்காணிப்பு செய்யும் பொறுப்பினை ஏற்கெனவே உள்ள கிராம மற்றும் வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருங்கிணைந்த முழுமையான மேம்பாட்டிற்கு வழிகாட்டும் விதம் அந்தப் பகுதியில் பணி செய்யும் தொண்டு நிறுவனத்தோடு இணைக்கப்பட வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
குழந்தைகள் வாழத் தகுதியான ஒரு சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் ஆதரவளிக்கும், தோள் கொடுக்கும் என்பதையும் உறுதி அளிக்கிறோம்”.