GOVT JOBS

நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மத்திய அரசு வேலைகளுக்கு ஒரே தேர்வு: தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: மத்திய அரசின் பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வு நடத்தும், ‘தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை’ (என்ஆர்ஏ) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அரசு பணியிடங்களுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு காலி பணியிடங்களுக்கு ஒரே மாதிரியான கல்வித் தகுதிகள் இருந்தாலும், வெவ்வேறு தேர்வாணையங்கள் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், மத்திய அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை வங்கி பணிகளுக்கு ஆண்டுக்கு சுமார் 2.5 கோடி பேர் விண்ணப்பித்து, 1.25 கோடி பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில், இந்த தேர்வுகள் அனைத்தையும் பொதுத்தகுதி தேர்வு என்ற ஒற்றை தேர்வில் தவிர்க்கலாம் என கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதன்படி, மத்திய அரசு பணியிடங்களை நிரப்ப நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வை (சிஇடி) நடத்துவதற்காக, ‘தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை’ (என்ஆர்ஏ) அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் தெரிவித்தனர்.அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு அவர்கள் அளித்த பேட்டியில், ‘‘மத்திய அரசு பணியிடங்களில் பணியாளர் நியமன நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க சீர்த்திருத்தம் இது. இதன் மூலம் இளைஞர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் வேலை தேடும் இளைஞர்கள் பயனடைவார்கள். வேலைக்கு ஆட்கள் எடுப்பது, வேலைவாய்ப்பு, பணி நியமனம் ஆகியன எளிதாகும். ஏழ்மையில் இருக்கும் இளைஞர்களும், பெண்களும் தேர்வுகள் எழுத நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அவர்களின் பயண அலைச்சல் தவிர்க்கப்படுவதோடு, நேரமும் பணமும் மிச்சமாகும்,’’ என்றார்.

சிறப்பம்சங்கள்:

* தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது தகுதித் தேர்வை எழுதி ஒருவர் தேர்ச்சி பெற்றால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பணிகளுக்கு நேரடியாக விண்ணப்பித்து வேலைவாய்ப்பில் பங்கேற்கலாம்.

* மத்திய அரசின் குரூப் பி மற்றும் சி ஆகிய தொழில்நுட்ப பிரிவுகள் சாராத பணியிடங்களுக்கு இந்த தகுதி தேர்வு நடத்தப்படும்.

* தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமையில் ரயில்வே, நிதித்துறை, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே பணியாளர் வாரியம் (ஆர்ஆர்பி), இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐபிபிஎஸ்) ஆகிய துறை சார்ந்த அதிகாரிகள் பிரதிநிதிகளாக இருப்பார்கள். இந்த அமைப்புகள் தங்களுக்கு வேண்டிய ஊழியர்களை, தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமையில் இருந்து எடுக்கும்.

* முதற்கட்டமாக இந்த பொது தகுதி தேர்வு மதிப்பெண்களை, 3 முக்கிய பணியாளர் தேர்வாணைங்கள் மட்டுமே பயன்படுத்தும். குறிப்பிட்ட கால இடைவெளியில் பிற அமைப்புகளும் சேர்க்கப்படும்.

* மத்திய அரசு பணியிடங்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு பணிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பிலும் பொது தகுதித் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.

* தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமையின் தலைமையகத்தை டெல்லியில் அமைக்க ரூ.1,517.57 கோடி நிதி ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் தலைவர், மத்திய அரசு துறை செயலாளர் அந்தஸ்து பெற்றவராக இருப்பார்.

* பொது தகுதி தேர்வில் சுமார் 2.5 கோடி முதல் 3 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

* முதல் கட்டமாக 1000 தேர்வு மையம்தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை அமைக்கப்பட்ட பிறகு, அதற்கான தேர்வு மையங்கள் 117 மாவட்டங்களில் அமைக்கப்படும். முதல் கட்டமாக 1000 தேர்வு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும். இதனால், தேர்வு எழுதும்  இளைஞர்கள் யாரும் வெளி மாவட்டங்களுக்கு சென்று சிரமப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

* பிரதமர் மோடி வரவேற்புதேசிய வேலைவாய்ப்பு முகமை குறித்து பிரதமர் மோடி அவரது டிவிட்டர் பதிவில், ‘தேசிய வேலைவாய்ப்பு முகமை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பொதுவான தகுதித்தேர்வு நடத்தப்படுவதன் மூலம் பல சோதனைகளை அகற்றி, விலைமதிப்பற்ற நேரத்தையும் வளங்களையும் மிச்சப்படுத்தும். மேலும் இது வெளிப்படைத்தன்மைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top