தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதால் பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன்;- ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12 வரை நடக்கும்.
மார்ச் 26ம் தேதி நடைபெற இருந்த 11-ம் வகுப்பு கடைசி தேர்வு ஜூன் 2ம் தேதி நடைபெறும். அதேபோல், 12ம் வகுப்பு தேர்வை மார்ச் 24ம் தேதி எழுதாத மாணவர்கள் ஜூன் 4ம் தேதி எழுதலாம் என தகவல் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பு கடைசி தேர்வை எழுதாத 36,000 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம்.
மாணவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் செய்து தரப்படும். மாணவர்களுக்கு இடையே சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.