PRIVATE JOBS

வீட்டிலிருந்து வேலை: ரூ.75,000 கொடுக்கும் கூகுள்!

கொடூர தொற்று நோயான கொரோனா வைரஸ் உலகின் அனைத்து நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்கா கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அங்கு தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் வேலையின்மைப் பிரச்சினை அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க, அமெரிக்காவில் தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலைபார்க்கப் பணித்துள்ளன.

அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களை இந்த ஆண்டின் இறுதி வரையில் வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதித்திருந்தது. அலுவலகத்துக்கு வர விரும்பும் பணியாளர்கள் சரியான பாதுகாப்பு அம்சங்களுடன் வேலை பார்க்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், வருகிற ஜூலை 6ஆம் தேதி முதல் கூகுள் நிறுவனத்தின் அலுவலகங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது 10 சதவீத அலுவலகங்கள் செயல்படும் எனவும், செப்டம்பர் மாத வாக்கில் 30 சதவீத அலுவலகங்கள் இயங்கும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, அவர்களுக்கு ரூ.75,000 வரையில் சம்பளத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. வீட்டில் வேலை பார்ப்பதற்கான டேபிள், இணைய இணைப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவும் அவற்றைப் பராமரிக்கவும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

அலுவலகத்துக்கு வந்து கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற நிலையில் இருக்கும் ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற கூகுள் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மற்ற அனைவரும் வீட்டில் இருந்து வேலை பார்க்க நிறுவனம் சார்பிலேயே வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு முழுவதும் இதே நிலை நீடிக்கும் என்றும், கொரோனாவின் தீவிரம் குறைந்தால் அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூகுள் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top