
Child Protection Scheme | இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்..
தமிழ்நாடு அரசு பெண் சிசுக் கொலைகளை தடுக்கும் வகையில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு 25 ஆயிரம் ரூபாய் என இரண்டு பெண் குழந்தைகளுக்கும் 50 ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு வைப்புத் தொகையாக கொடுக்கும்.

தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் இந்த தொகை முதலீடு செய்யப்பட்டு வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.
இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்தவுடன், வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை பெண் குழந்தைக்கு வழங்கப்படும். இந்தப் பலனைப் பெற, பெண் குழந்தைகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுத வேண்டும்.

மேலும், பெண் குழந்தைகளுக்கு கல்விச் செலவுகளை ஈடுகட்ட வைப்புத் தொகை டெபாசிட் செய்யப்பட்ட 6வது ஆண்டு முதல் ஆண்டு ஊக்கத் தொகையாக ரூ.1800/- வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் பயன்பெற சில நிபந்தனைகள் உள்ளன.
ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று. குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சான்று, (40 வயதிற்குள் இருக்க வேண்டும்). வருமான சான்று ரூ.1,20,000க்குள் இருக்கவேண்டும்.
இரண்டாவது பெண் குழந்தைக்கு 3 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பிறப்பு சான்று, தாய் மற்றும் தந்தையின் சாதிச் சான்று, தாய் மற்றும் தந்தையின் இருப்பிடச் சான்று ஆகியவை இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதிகள் ஆகும்.
மார்ச் 15ம் தேதிக்குள் இசேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பை இப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலங்களுக்கு சென்று கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்
